இலங்கையில், கடந்த 24 மணித்தியால காலப்பகுதியில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மரணம் எதுவும் பதிவாகவில்லை என்று கொவிட் தொற்று பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினமே இவ்வாறானதொரு நாள் பதிவாகியுள்ளது. கொவிட் தொற்றின் காரணமாக இதுவரையில் இலங்கையில் பதிவான மொத்த மரணங்களின் எண்ணிக்கை 464 ஆகும். இது நாட்டில் பதிவான மொத்த தொற்றுக்குள்ளானவர்களில் 0.5 சதவீதமாகும்.

நாட்டில் இடம்பெற்ற மொத்த கொவிட் மரணங்களில் ஆகக் கூடுதலானோர் அதாவது, 41 சதவீதமானோர் 61 க்கும் 75 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் ஆவர். 28 சதவீதமானோர் 76 க்கும் 90 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். 20 சதவீதமானவர்கள் 46 க்கும் 60 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் ஆவர்.

இதேவேளை 16 க்கும் 30 க்கும் இடைப்பட்ட வயது பிரிவைச் சேர்ந்தோரில் ஒரு சதவீதமான மரணமே இடம்பெற்றுள்ளது. 31 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைப்பட்ட வயது பிரிவைச் சேர்ந்தோரில் மொத்த மரண விகிதம் 0.7 ஆகும்.

நாட்டில் இதுவரை பதிவான மொத்த கொவிட் வைரஸ் தொற்றாளர் எண்ணிக்கை 82,890 அகும். இவர்களில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 78,947 ஆகும். இது 94.06 சதவீதமாகும்.

மேலும் சிகிச்சை பெற்றுவருவோர் எண்ணிக்கை 4053 ஆகும். இது 04.09 சதவீதமாகும். நாட்டில் கடந்த 24 மணித்தியால காலப்பகுதியில் 12,632 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்போது பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை 460 ஆகும்.

முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் 96 மத்திய நிலையங்களில் 9,667 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது