(ஆர்.ராம்)

*தமிழ்த் தேசியப் பேரவையில் இணைவில்லை

* ஐக்கியச் செயற்பாடுகளுக்கு பூரணமான ஆதரவு

*புதிய கூட்டணிகளில் பங்கேற்கபதில்லை

*தேர்தல் கூட்டுக்களுக்கு ஒருபோதும் இடமில்லை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் பிரித்தனியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் முன்மொழியப்பட்டுள்ள இலங்கை தொடர்பான 46/1 பிரேரணையை அவ்வாறு நிறைவேற்றப்பட வேண்டும் என்ற நிலைப்பட்டிற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்தியசெயற்குழுக் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

அதேநேரம், தமிழ்த் தேசியப் பேரவை அல்லது இன்னோரன்ன பெயர்ப்பலகைகளில் உருவாகும் கூட்டணிகளில் இலங்கை தமிழரசுக்கட்சி பங்கேற்பதில்லை என்றும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வெளியே தேர்தல் கூட்டுகளுக்குச் செல்வதில்லை என்றும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போதைய அரசாங்கத்தின் அடக்கு முறையான செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கும், பொதுமக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுக்கான நடவடிக்கைகளிலும் தமிழ்த் தேசியத்தளத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுடனும் இணைந்து ஐக்கியமாகச் செயற்படுவதென்றும் இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்தியசெயற்குழுக் கூட்டம் நேற்று சனிக்கிழமை வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது. தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வடமாகாண சபையின் தவிசாளர் சி.வி.கே.சிவஞானம், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறீதரன், இரா.சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சரவணபவன், அரியநேத்திரன், சிவமோகன், ஞா.சிறிநேசன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், கே.சயந்தன், குருகுலராஜா, சட்டத்தரணி வி.தவராசா, மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சரவணபவன் மற்றும் பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

இந்த மத்திய செயற்குழு கூட்டத்தில் நடைபெற்ற கலந்துரையாடல்கள் மற்றும் தீர்மானங்கள் சம்பந்தமாக இலங்கை தமிழரசுக்கட்சியின் பிரதி பொதுச்செயலாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. தெரிவித்தாவது, இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் ஆரம்பத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்மொழியப்பட்டுள்ள இலங்கை தொடர்பான பிரேரணை குறித்து ஆராயப்பட்டது.

இதன்போது, பிரேரணையில் குறிப்பிட்டுள்ள  விடயங்கள்  தொடர்பில்  ஒவ்வொன்றாக எமது சக உறுப்பினர்களுக்கு என்னால் விளக்கம் அளிக்கப்பட்டது. அத்துடன் வார்த்தைகளில் நேரடியான வெளிப்பாடுகள் இல்லாதபோதும் குறித்துரைக்கப்பட்டுள்ள அவதானிப்புக்கள் மற்றும் பரிந்துரைகள் கனதியாகவும், திருப்திகரமானதாகவும் இருக்கின்றன என்பது ஏனைய உறுப்பினர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அத்துடன், அந்தப் பிரேரணை அவ்வாறே நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அனைத்து உறுப்பினர்கள் மத்தியிலும் பொதுவான இணக்கப்பாடு எட்டப்பட்டது.

அதற்கு அடுத்தபடியாக, புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகள் தொடர்பில் மத்திய செயற்குழு உறுப்பினர்களுடன் கலந்தாராயப்பட்டது. அண்மையில் புதிய அரசியமைப்புக்கான நிபுணர் குழுவினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையில் நேரில் சென்று சந்தித்து எடுத்துரைத்த விடயங்கள் சம்பந்தமாகவும் சக உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து தமிழ்த் தேசியத் தளத்தல் உள்ள அரசியல் கட்சிகளுடன் கூட்டிணைந்து செயற்படுவது தொடர்பிலான கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்போது பத்துக்கட்சி கூட்டு மற்றும் தமிழ்த் தேசியப் பேரவை உருவாக்கம் தொடர்பில் நீண்ட ஆராய்வுகள் நடைபெற்றன.

தமிழரசுக்கட்சியின் மூத்த மற்றும் இளைய உறுப்பினர்கள் தமிழரசுக்கட்சியின் பாரம்பரியம் மற்றும் தனித்துவம் அழிந்து விடக்கூடாது என்பதை முன்னலைப்படுத்தி கருத்துக்களை முன்வைத்தனர். விசேடமாக நீண்ட வரலாற்றைக் கொண்ட தமிழரசுக்கட்சியே அவ்விதமான செயற்பாடுகளுக்கு தலைமை வகிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அடையாளத்துடன் தற்போது செயற்பட்டு வருகையில் அதற்கு வெளியே பிறிதொரு பெயர்ப்பலகையின் கீழான செயற்பாடுகள் அவசியமில்லை என்றும் சக உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.

இதனையடுத்து தமிழ்த் தேசியப் பேரவை உட்பட எந்தவொரு கூட்டணியின் அடையாளங்களிலும் தமிழரசுக்கட்சி இணைவதில்லை என்றும் தேர்தல் கூட்டுக்களில் கூட்டமைப்புக்கு வெளியே பங்கேற்பதில்லை என்றும் தீர்மானிக்கப்பட்டது.

அதுமட்டுமன்றி தற்போதைய அரசாங்கத்தின்செயற்பாடுகளுக்கு முகங்கொடுப்பதற்கும் தமிழ் மக்களின் பொதுவான விடயங்களிரும் தமிழ்த் தேசியத் தளத்தில் உள்ள அரசியல் கட்சிகளிடையே ஐக்கியம் முக்கியம் என்பதில் தமிழரசுக்கட்சி உறுதியாக இருப்பதோடு அவ்விதமான ஐக்கியமான செயற்பாடுகள் அந்தந்த சந்தர்ப்பங்களுக்கு ஏற்க கட்சி கூடி ஆராய்ந்து பிரதிபலிக்கும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய கட்சிகளே தற்போது வெளியில் பிறிதொரு அணியை உருவாக்க முயற்சிப்பதாகவும் அக்கட்சிகள் மீண்டும் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட விரும்பினால் அதுபற்றி ஆராய்ந்து முடிவெடுக்கலாம் என்றும் சில உறுப்பினர்கள் பிரஸ்தாபித்தனர் என்றும் சுமந்திரன் குறிப்பிட்டார்.