கொழும்பில் கலை, இலக்கிய, சமூக பணிகளில் புதுத்தடம் பதித்தவரும் புதிய அலை கலை வட்டம் இவ்வாண்டினில் மாதந்தோறும் கலை, கலாசாரப்போட்டிகளை நடத்தி  படைப்பாளிகளுக்கு ஊக்கமளித்து வருகின்றது.

இந்த வகையில் பெப்ரவரி மாதத்துக்கான போட்டியாக நகைச்சுவை எழுதும் போட்டியை நடத்தியது. 

நாடாளாவிய ரீதியில் வயது கட்டுப்பாடின்றி நடத்தப்பட்ட இப்போட்டியில் 35 வயதிற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இவர்களில் முதலாம் இடத்தை மட்டக்களப்பைச்  சேர்ந்த செல்வி சபினாவும் இரண்டாம் இடத்தை வவுனியாவைச் சேர்ந்த க. கந்தசாமி குருக்களும் மூன்றாம் பரிசை உக்குவலையைச் சேர்ந்த எம்.பரீனும் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.

இவர்களுக்கான பரிசளிப்புவிழா எதிர்வரும் 06.03.2021 ஆம் திகதி சனிக்கிழமையன்று   இல.582 அளுத்மாவத்தை வீதி, கொழும்பு -15 இல் அமைந்துள்ள கிளார கல்வி நிறுவனத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.

பிரபல கவிஞர் பிரேம்ராஜ் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வினில், பிரதம அதிதியாக புரவலர் புத்தகப் பூங்க நிறுவனர் ஹாசிம் உமர், சிறப்பு அதிதிகளாக நெய்னர் சமூக நல காப்பகத் தலைவர் இம்ரான் நெய்னார் அஸிஸ் மன்றத் தலைவர் அஷ்ரப் அஸிஸ் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இந்தப் போட்டித்தொடரின் எதிர்வரும் மாதங்களுக்கான நிகழ்வுகளாக மார்ச் மாதத்தில் பாடல் எழுதும் போட்டியும் ஏப்ரல் மாதத்தில் கட்டுரை எழுதும் போட்டியும் மே மாதத்தில் குறுநாடகம் ( 30 நிமிடம் ) பிரதி எழுதும் போட்டியும் ஜூன் மாதத்தில் நெடு நாடகம் (ஒரு மணி) பிரதி எழுதும் போட்டியும் நடைபெறவுள்ளன. ஆர்வம் உள்ளவர்கள் இப்போதே தம்மை தயார்படுத்திக் கொள்ள முடியும்.