இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு  நீதி வேண்டி பிரிட்டனில் வாழும் அம்பிகை செல்வகுமார், சாகும் வரை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை லண்டனில் நேற்று ஆரம்பித்த நிலையில் அவருக்கு வலுச் சேர்க்கும் வகையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் நல்லூரில் உணவுதவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

பல்கலைக்கழக  மாணவர்கள் இருவருடன் வேலன் சுவாமிகள், அருட்தந்தையர்கள் இருவர் என ஐந்து பேர் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளமையும் குறிப்பிடதக்கது.

இலங்கையை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தவேண்டும், உள்பட 4 கோரிக்கைகளை முதன்மையாக முன்வைத்து அம்பிகை செல்வகுமார் சாகும்வரை உணவு தவிர்ப்புப் போராட்டத்தை லண்டனில் நேற்று ஆரம்பித்தார்.

மேலும், உலகத்தமிழர்கள் அனைவரும் வேற்றுமைகளின்றி ஆதரவு அளிக்க வேண்டு என அம்பிகை செல்வகுமார் கோரிக்கை விடுத்திருந்தார்.

குறித்த போராட்டம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நல்லூரில் உணவுதவிர்ப்புப் போராட்டம் இன்று முற்பகல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்தவேண்டும் உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை முன்வைத்து லண்டனில் தமிழ் பெண்ணொருவர் சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

புலம்பெயர் லண்டனில் வசிக்கும் அம்பிகா செல்வகுமார் என்ற பெண்மணியே சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வில் பிரிட்டன் சமர்பித்துள்ள தீர்மானத்தில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு பரிந்துரைத்தல் சர்வதேச சுயாதீன புலனாய்வுப் பொறிமுறையை உருவாக்குதல் மற்றும் இலங்கைக்கான ஐ.நா. நிரந்தர சிறப்புப் பிரதிநிதியை நியமித்தல் போன்றவற்றை உள்ளடக்க வேண்டும் என பிரிட்டன் அரசிடம் வேண்டுகோள் விடுத்து சாகும் வரை உணவு தவிர்ப்புப் போராட்டம் ஒன்றை அம்பிகா செல்வகுமார்  ஆரம்பித்துள்ளார்.

அம்பிகா செல்வகுமார் சர்வதேச இனப்படுகொலையைத் தடுத்தல் மற்றும் வழக்காடு மையத்தின் பணிப்பாளராக பணியாற்றுகின்றார். அத்துடன் தொடர்ச்சியாக தமிழர்களின் பிரச்சினையை சர்வதேச மயப்படுத்தும் நோக்கத்துடன் செயற்பட்டு வருகிறார்.

இந்நிலையிலேயே இவரது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ். நல்லூர் பகுதியில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.