( எம்.மனோசித்ரா )

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முழுமையாக எதிர்க்கிறது.

சட்டத்தரணிகள் ஊடாக அறிக்கையை முழுமையாக ஆராயந்ததன் பின்னர் பங்காளி கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் உள்ளிட்டவற்றுடன் கலந்தாலோசித்து அதனை எதிர்ப்போம் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் பேராசிரியர் றோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கையை நிராகரிப்பதற்கு சு.க. தீர்மானித்துள்ள நிலையில் அடுத்தகட்ட நடிவடிக்கை தொடர்பில் வினவிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் , 

2019 இல் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று அடிப்படைவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என்பது அத்தியாவசியமானது.

அதற்கு எமது தரப்பில் வழங்க வேண்டிய சகல ஒத்துழைப்புக்களையும் வழங்க தயாராகவுள்ளோம். எனினும் அந்த அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி சு.க. தலைவர் மைத்திரிபால சிறிசேன மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

எனினும் அன்றைய அரசாங்கத்தில் பொறுப்பு கூற வேண்டிய வேறு எந்தவொரு நபர் தொடர்பிலும் அறிக்கையில் கூறப்படவில்லை. இவ்வாறு பல குறைபாடுகள் குறித்த அறிக்கையில் காணப்படுகின்றன. சு.க. மாத்திரமின்றி ஏனைய கட்சிகளும் , மதத் தலைவர்களும் கூட இதனை நிராகரிப்பதாக அறிவித்துள்ளனர்.

எனவே நாம் இது தொடர்பில் சட்டத்தரணிகள் ஊடாக முழுமையாக ஆராயந்து எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்துவோம். அத்தோடு பங்காளி கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் உள்ளிட்டவர்களுடன் கலந்தாலோசித்து அறிக்கையை எதிர்ப்போம் என்றார்.