பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு முதலீடுகளை அதிகரிப்பதே  எமது நாட்டின் நோக்கம் என நிதி மூலதன சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறு சீரமைப்பு அமைச்சின் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்

இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு யாழ் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் மேற்கொண்டு கல்வியலாளர்களுடன் கலந்துரையாடிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,  நான் முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த காலத்தில் பல்வேறு வேலைத்திட்டங்களின் போது யாழ் மக்களுடன் தொடர்புகளை பேணி வந்து இருக்கின்றேன். நமது மத்திய வங்கியின் வடக்கு அலுவலகம் உட்பட ஏனைய வங்கியின் அலுவலங்கள் தொடர்பில் இங்கே பல நிகழ்வுகளில் நான் கலந்து கொண்டுள்ளேன் அத்தோடு கொழும்பை தளமாக கொண்ட வங்கிகளின் உப அலுவலகங்களில் கூட இங்கே யாழ்ப்பாணத்தில் விரிவாக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் விவசாய நடவடிக்கைகள் மிகவும் சிறப்பாக இருப்பதை நான் அவதானித்தேன். யாழ்ப்பாணத்தை பொறுத்தவரைக்கும் விவசாயத்துக்கான நீர் பெறுவதில் பெரும் சிக்கல் நிலை காணப்படுகின்றது. அவ்வாறான நிலையில் கூட விவசாயிகள் விவசாயத்தை மிகவும் சிறப்பாக மேற்கொள்கிறார்கள் அதாவது எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என வயல்களும் தோட்டங்களும் காட்சியளிக்கின்றது என்றார்.