(செ.தேன்மொழி)
களுத்துறை பகுதியில் நோயால் பாதிக்கப்பட்டிருந்த நாயொன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். களுத்துறை பகுதியில் நீர்வெறுப்பு நோயினால் பாதிக்கப்பட்ட நாய் பொது மக்கள் சிலரை கடித்துள்ளதாக களுத்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

அந்த முறைப்பாட்டுக்கமைய இன்று சனிக்கிழமை காலை முற்பகல் 10.30 மணியளவில் குறித்த நாய் நடமாடிக் கொண்டிருந்த இடத்திற்கு சென்ற பொலிஸ் குழுவின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி நாய் உயிரிழந்துள்ளது.

நாய்மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அங்கிருந்த 60 வயதுடைய நபரொருவரும் காயமடைந்துள்ளார். அவர் சிகிச்சைக்காக களுத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் களுத்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.