ஜனாதிபதியின் நாட்டை கட்டியெலுப்பும் சுபீட்சமான நோக்கு எனும் வேலைத்திட்டத்தின் கீழ் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களது வழிகாட்டலில் உங்களுக்கு வீடு நாட்டிற்கு எதிர்காலம் எனும் திட்டத்திற்கு அமைவாக கடந்த 2020 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தின் ஊடாக ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிற்கும் ஒரு வீடு என்ற அடிப்படையில் நாடு பூராகவும் 16 ஆயிரம் கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகளில் வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 250 வீடுகள் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் மேலும் 43 வீட்டுரிமையாளர்களுக்கான முதற்கட்ட நிதி வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (27) கல்லடியில் அமைந்துள்ள மட்டக்களப்பு தேசிய வீடமைப்பு அதிகார சபையில் மாவட்ட காரியாலயத்தில் மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் கலந்துகொண்ட நிகழ்விற்கு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன், பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனது மக்கள் தொடர்பாடல் அதிகாரி த.ஈஸ்வரராஜா உள்ளிட்ட முற்போக்கு தமிழர் அமைப்பின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது 43 பயனாளிகளுக்கு தலா ஒரு இலட்சம் வீதம் நாற்பத்து மூவாயிரம் இலட்சம் வழங்கி வைக்கப்பட்டது.


அரசாங்கம் இப்பொழுது வீடமைப்பு சம்பந்தமாக மக்களை கடனாளியாக்காமல் அவர்களுக்குரிய சொந்த வாழ்விடத்தில் வீட்டை கட்டிக் கொடுக்க வேண்டும் எனும் விடயத்தில் நாட்டினுடைய ஜனாதிபதி மற்றும் பிரதமரும் மிகவும் கவனமாக இருக்கின்றார்கள். அதே போன்று வீடமைப்புத் துறைக்கு பொறுப்பாக இருக்கின்ற இராஜாங்க அமைச்சர் இந்திக்கவிடம் நாங்கள் பல தடவைகளாக பேசிக்கொண்டு இருக்கின்றோம். பல வீட்டுத் திட்டங்களை நாங்கள் கோரியிருக்கின்றோம். நாங்கள் முன்வைக்கும் எந்தக் கோரிக்கைக்கும் எந்த விதமான மறுப்பும் தெரிவிக்காமல் உண்மையில் வட கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களிற்கு பெருமளவான வீட்டுத் திட்டங்களிற்கான தேவைப்பாடு இருக்கின்றது. இப்பொழுது அரசாங்கம் அவற்றிற்கான தீர்வை மிகவும் வேகமாக முன்னெடுத்து வருகின்றது. 

அத்தோடு கடந்த அரசாங்க காலத்தில் 12,8000 ஆயிரம் பெறுமதியான, சுமார் 65 ஆயிரம் வீடுகள் வரவிருந்தது அதில் 6 வீடுகளைக் கூட கடந்த அரசாங்கம் கட்டி முடிக்கவில்லை. ஆனால் அந்த வீட்டுத்திட்டத்திலே நாங்கள் மட்டக்களப்பில் 100 வீடுகளை கட்டுவதற்கான அடிக்கற்களை நாங்கள் நாளை அல்லது நாளை மறுதினம் நடுவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம் என்றார்.