தமிழ் திரை உலகின் முன்னணி பாடகியாக வளர்ந்து வரும் பின்னணி பாடகியான ஜொனிதா காந்தி, கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

அறிமுக இயக்குனர் வி. விநாயக் இயக்கத்தில் தயாராகிவரும்  முதல் திரைப்படம் 'வாக்கிங் / டாக்கிங் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம்'.

இந்தப்படத்தில் 'சூரரைப்போற்று' பட புகழ் நடிகர் கேகே எனப்படும் கிருஷ்ணகுமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பின்னணி பாடகி ஜொனிதா காந்தி நடிக்கிறார். இவர் தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் முதல் திரைப்படம் இது.

ஏ. ஆர். ரகுமான் இசை அமைப்பில் உருவான 'ஓ காதல் கண்மணி' என்ற  படத்தில் இடம்பெற்ற ' 'மென்டல் மனதில்..' என்ற பாடலை பாடி தமிழ் திரை இசை ரசிகர்களுக்கு பின்னணி பாடகியாக அறிமுகமானவர் ஜொனிதா காந்தி.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி மற்றும் தெலுங்கிலும் திரைப்பட பாடல்களைப் பாடியிருக்கிறார். இசை அமைப்பாளர் ஏ. ஆர். ரகுமானைத் தொடர்ந்து அனிருத், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் சங்கர் ராஜா, விவேக்-மெர்வின் உள்ளிட்ட பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையிலும் இவர் பல பாடல்களை பாடியிருக்கிறார்.

அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் 'டாக்டர்' என்ற படத்தில் இடம்பெறும் 'செல்லம்மா..' என்ற பாடலையும் இவர் பாடியிருக்கிறார். திரைப்பட பாடல்களுடன் ஏராளமான ஏராளமான இசை அமைப்பாளர்களின் அல்பங்களில் இவர் பாடியிருக்கிறார்.

பின்னணி பாடகியான இவரை நடிகையாக அறிமுகப்படுத்துவது குறித்து இயக்குனர் விநாயக் பேசுகையில்,' வாக்கிங் / டாக்கிங் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம்' படத்திற்கு புதிய முகம் தேவைப்பட்டது.

இந்த காதல் கதை இசையுடனும் தொடர்புடையதால் பின்னணி பாடகியான ஜொனிதாவை நாயகியாக அறிமுகப்படுத்தினால் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணி அறிமுகப்படுத்துகிறோம்.' என்றார்.

தமிழ் திரை உலகில் நடிகையாகவும், பாடகியாகவும் ஸ்ருதி ஹாசன், ஆண்ட்ரியா, ரம்யா நம்பீசன் என பலர் இருக்க, முதன்முதலில் பின்னணி பாடகியாக அறிமுகமாகி, குரலினிமையால் பிரபலமாகி, அதனைத் தொடர்ந்து நாயகியாக அறிமுகமாகும்.

  முதல் நடிகை ஜொனிதா காந்தி என்பதாலும், இனிமையான குரலால் ரசிகர்களை காந்தம் போல் கவர்ந்த இவர், நடிப்பிலும் பார்வையாளர்களை பரவசப்படுத்தும் வகையில் தன் திறமையை வெளிப்படுத்துவார் என்ற நம்பிக்கையிலும் இவரை ரசிகர்கள் இருகரம் கூப்பி வரவேற்கிறார்கள்.