( செ.தேன்மொழி )

21 553 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொவிட் -19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

கொவிட் - 19 தடுப்பூசிகள் தற்போது செலுத்தப்பட்டு வருகின்ற நிலையில் , இதுவரையில் 21 ஆயிரத்து 553 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

நேற்று மாத்திரம் 3565 உத்தியோகத்தர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருந்தன.

தற்போது சேவையில் ஈடுபட்டு வரும் உத்தியோகத்தர்களுக்கே இவ்வாறு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருவதுடன் , பொலிஸ் வைத்தியசாலையிலிருப்பவர்களுக்கு ஏற்கனவே தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருந்தன.  

கொவிட் - 19 வைரஸ் பரவலுக்கு மத்தியில் பொலிஸார் பல்வேறு சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மற்றும் வைரஸ் பரவலை தடுப்பதற்கான செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த காலங்களில் வைரஸ் தொற்றுகாரணமாக பொலிஸாரும் பாதிக்கப்பட்டிருந்தனர். அதனை தடுக்கும் வகையிலேயே பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் இவ்வாறு தடுப்பூசி வழங்கப்படுகின்றது.