தடுப்பூசி போட்ட பின்னர் காய்ச்சல் வந்தால் அச்சமடைய வேண்டாம்: உடம்பில் மருந்து வேலை செய்ய ஆரம்பித்துவிட்டதென சந்தோஷமடையுங்கள் 

Published By: J.G.Stephan

27 Feb, 2021 | 01:53 PM
image

- நேர்கண்டவர் - ரொபட் அன்டனி  -

1. எந்தவொரு தடுப்பூசி போட்டாலும் காய்ச்சல் உடம்பு வலி வருவது சாதாரணமானது 

2. நம்பிக்கையுடன் ஆர்வமான தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுங்கள் 

3. ஏற்கனவே கொரோனா தொற்று, வேறு தொற்றுள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படாது  

4. தொற்றா நோயுள்ளவர்களுக்கு கட்டாயமாக தடுப்பூசி  போடப்படும் 

5. கர்ப்பிணி தாய்மார்,  18 வயதுக்கு குறைந்தோர், 

6 மாதங்களுக்கு உட்பட்ட பாலூட்டும் தாய்மாருக்கு  தடுப்பூசி இல்லை  

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை பெற்றுக்கொண்ட பின்னர் காய்ச்சல் உடம்பு வலி என்பன வந்தால் உண்மையில் அதனை நீங்கள் சந்தோசமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அது தொடர்பில் அச்சமடையவேண்டாம். காரணம் உங்கள் உடம்பில் தடுப்பூசி வேலை செய்ய ஆரம்பித்து விட்டது என்பதே அதன் அர்த்தமாகும். ஆனால் அவ்வாறு காய்ச்சல் உடம்பு வலி வராதவர்களுக்கு தடுப்பூசி வேலை செய்யவில்லை என்று அர்த்தமில்லை. வருகின்றவர்கள் சந்தோஷப்படலாம் என வடமாகாண சமுதாய வைத்திய நிபுணர் டாக்டர் கேசவன் தெரிவித்தார்.

ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கும் வேறு தொற்றுநோய்கள் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடப்படாது. ஆனால் அவர்கள் சுகமடைந்த பின்னர் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம். ஆனால் தொற்றா நோய் உள்ளவர்களுக்கு நிச்சயமாக இந்த தடுப்பூசி போடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

 வீரகேசரிக்கு வழங்கிய விஷேட செவ்வியிலேயே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். செவ்வியின் முழு விபரம் வருமாறு, 

கேள்வி: கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் இலங்கையில் தற்போது எவ்வாறு இடம்பெறுகின்றன.

 பதில்: இலங்கையின் தடுப்பூசி தொடர்பான கொள்கையின்படி முதலாவதாக சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது.  அதற்கு காரணம் ஒரு சுகாதார ஊழியருக்கு இந்த தொற்று வந்தால் அது அந்த கட்டமைப்பையே பாதிக்கும். அதனை முதலில் தடுக்க வேண்டும். அடுத்ததாக முப்படைகளுக்கும் போலீசாருக்கும் தடுப்புசி வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர்ந்து  சுகாதார துறை சம்பந்தமான மாணவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. காரணம் இவர்கள் தொற்று நோயை காவிக் கொண்டு செல்லும் அபாயம் காணப்படுகின்றது. அடுத்ததாக தற்போது நாங்கள் பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்க ஆரம்பித்திருக்கிறோம்.

கேள்வி: அது எவ்வாறு நடைபெறுகிறது?

பதில்: பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்கும் போது இரண்டு விதமான கருகோள்கள் காணப்படுகின்றன. முதலாவது நோய் பரவுகின்ற தன்மையை குறைப்பதற்கான அணுகுமுறையாகும். அதாவது 30 தொடக்கம் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகளவில் இந்த தொற்றை  பரப்புவதற்கான சாத்தியத்தை கொண்டிருக்கின்றனர். அவர்களே அதிகளவில் சமுதாயத்தில் நடமாடுகின்றனர். அவர்களால் இந்த நோய் பரவும் சாத்தியம் கூட உள்ளது. அது முதலாவது கருதுகோளாகும். எனினும் நாட்டில் தொற்றின் காரணமாக இறப்புக்களை  குறைப்பதற்கான கருதுகோளும் கவனத்தில் எடுக்கப்பட்டது. அப்படியானால் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதலில் தடுப்பூசியை வழங்கவேண்டும் என்ற விடயம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதாவது இங்கிலாந்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்க ஆரம்பித்ததன் பின்னர் அங்கு இறப்பு வீதம் குறைவடைந்திருக்கிறது. எனவே இங்கு அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் அடுத்ததாக 30 வயதிற்கும் 60 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் என்ற வகையில் தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

கேள்வி: இந்த செயற்பாட்டில் உங்களுக்கு உள்ள சவால் என்ன ?

பதில்: எமக்குள்ள பிரச்சனையானது எங்களுக்கு கிடைக்க கூடிய தடுப்பூசிகளின் அளவு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. காரணம் உலகம் முழுவதும் இந்த தடுப்பூசியின் தேவை காணப்படுகிறது. உலக மக்கள் அனைவருக்கும் தடுப்பூசிகளை உற்பத்தி செய்வது என்பது சவாலானது. உற்பத்தி செய்வது என்பது சவால்மிக்கது. எனவே இதன் அளவு எங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருப்பதால் எங்களுக்கு ஒரு சவால் காணப்படுகிறது. அடுத்ததாக இந்த தடுப்பூசி எல்லா மக்களையும் சென்றடைய வேண்டும். குறித்த செய்தி மக்களை சென்றடைய வேண்டும். விதிமுறைகளை மக்கள் பேணிக்கொண்டு இதில் தம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்.  அதாவது முகக்கவசம் அணிதல் சமூக இடைவெளி பேணுதல் கைகளை கழுவுதல் என்பன இந்த தடுப்பூசி பெற்றுக் கொள்ளும் செயற்பாட்டில் இருக்கவேண்டும்.  அவ்வாறான பொறிமுறையை உருவாக்குவதில் தற்போது நாங்கள் ஈடுபட்டிருக்கின்றோம்.  

கேள்வி: தடுப்பூசி விடயத்தில் வடமாகாணத்தின் நிலைமை எவ்வாறு இருக்கின்றது?

 பதில்: வட மாகாண நிலைமைகளை பார்க்கும்போது அந்த விடயம் சற்று இலகுவாக இருக்கின்றது. காரணம் வட மாகாணத்தில் சனத்தொகை குறைவாகும். இதே விடயத்தை நாம் கொழும்பில் எடுத்துப் பார்த்தால் அந்த பொறிமுறை மிக கடினமாக அமையும்.  எனினும் நாம் தற்போது அதனை செய்து வருகிறோம். மக்களுக்கு அந்தந்த சுகாதார வைத்திய பணிமனைகள் ஊடாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு எங்கு தடுப்பூசி போடப்படும் என்பதும் அறிவிக்கப்படும். அந்த இடங்களுக்கு மக்கள் சென்று தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாம். குறித்த சுகாதார பணிமனையின் அதிகாரிகள் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பார்கள். குறிப்பாக மக்களை தொடர்பு கொண்டு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தல்களை வழங்குவார்கள். வட மாகாணத்தில் 88 வீதமான சுகாதார துறையினருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுவிட்டது.  

எஞ்சிய 12 விதம் தொடர்பில் உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம். ஆனால் நூறு வீதம் போட முடியாது. காரணம் கர்ப்பிணிகள் ஆறு மாதத்திற்கு உட்பட்ட பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி போடப்படாது. சிலருக்கு சில மருத்துவ காரணங்கள் காரணமாக தடுப்பூசியை வழங்குவது முடியாதது. 

கேள்வி:  எங்களுக்கு இதுவரை எவ்வளவு தடுப்பூசிகள் வந்துள்ளன எதிர்காலத்தில்  எவ்வளவு தடுப்பூசிகளை இலங்கை பெற உள்ளது?

 பதில்: எங்களுக்கு ஏற்கனவே 5 லட்சம் தடுப்பூசிகள் வந்துவிட்டன. அடுத்ததாக சில தினங்களில் மேலும் 5 இலட்சம் தடுப்பூசிகள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வரவுள்ளன. (வியாழக்கிழமை இலங்கை வந்தன) மேலும் ஒரு கோடி தடுப்பூசிகளை இந்தியாவில் இருந்து பெறுவதற்கு அரசாங்கம் திட்டமிடுகிறது. அதிலேயே தற்போது 5 இலட்சம் தடுப்பூசிகள் வருகின்றன. ஆனால் ஒரு கோடியை தாண்டி மேலும் தடுப்பூசிகள் பெறப்படும் சாத்தியம் இருக்கின்றது.   

கேள்வி: இலங்கையில் எத்தனை வீதமானோர் தடுப்பூசிகள் போடப்பட வேண்டும் என்று சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது? 

பதில்: இலங்கையில் 70 வீதமான பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட வேண்டும் என்பதே எமது இலக்காகும்.

கேள்வி: தற்போது தடுப்பூசி போடப்பட ஆரம்பித்துவிட்டது. தடுப்பு ஊசியை பெற்றுக்கொண்ட அனுபவங்கள் எவ்வாறு காணப்படுகின்றன? 

பதில்: இந்த தடுப்பூசிகள் 60 தொடக்கம் 90 வீதம் வரை நோயை தடுப்பதற்கான தன்மையைக் கொண்டிருக்கின்றன. அதாவது நான் இந்தியாவின் கொவிசீல் தடுப்பூசி பற்றி கூறுகிறேன். இது உண்மையில் ஒரக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தினால் தயாரிக்கப்படுகிறது.  இலங்கை வம்சாவளி பெண் ஒருவரே இதனைக் கண்டுபிடித்தார். அதாவது 100 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டால் அதில் 70 பேருக்கு நிச்சயமாக கொரோனா வராது. அதேநேரம் எஞ்சிய 30 பேருக்கு பகுதியளவு பாதுகாப்பு கிடைக்கிறது. 

காரணம் உலகத்தில் எந்த ஒரு தடுப்பூசியும் நூறுவீதம் முழுமையாக இருக்காது. இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி விதம் உருவாகும் தன்மை குறைவாக இருக்கலாம். பல மருத்துவ காரணங்கள் இருக்கலாம். அதனால்தான் நாம் ஒரு விடயத்தை அழுத்தமாக கூறுகின்றோம். முதலாவது தடுப்பூசியை பெற்றுக் கொண்ட பின்னரும் மக்கள் பழைய மாதிரி அதே சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். முகக் கவசம் அணிதல் சமூக இடைவெளி கைகளை கழுவுதல் ஆகியவற்றை பின்பற்ற வேண்டும். இரண்டாவது தடுப்பூசி பெற்றுக்கொண்ட பின்னர் 85 வீதத்துக்கு மேல் பாதுகாப்பு இருக்கும். அப்போது கூட நீங்கள் சுகாதார விதிமுறைகளை பேண வேண்டும். காரணம் அப்போது கூட இலங்கையில் நாட்டில் ஒரு குறிப்பிட்ட சதவீதமானோர் தடுப்பூசி போடாமல் இருக்கின்றனர் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். நாங்கள் இந்த வைரஸை காவிக்கொண்டு செல்லும் அபாயம் இருக்கிறது.  எனவே சுகாதார கட்டுப்பாடுகளை அலட்சியம் செய்து விடக்கூடாது.

 கேள்வி: எப்போது இந்த சுகாதார விதிமுறைகளை தளர்த்தலாம்?

 பதில்: நாட்டில் கொரோனா இல்லாமல் போனதன் பின்னரே இந்த விதிமுறைகளை நாம் தளர்த்த முடியும்.

கேள்வி: எப்போது வைரஸ் இல்லாமல் போகும்?

பதில்: நாட்டில் 70 வீதமானோருக்கு தடுப்பூசியை போட்டுவிட்டால் கொரோனா இலங்கையிலிருந்து அழிந்துவிடும். அதற்கு இருப்பதற்கு இடமில்லாமல் போய்விடும். காரணம் 70 வீதமானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு விட்டால் இந்த வைரஸ் எங்கு செல்வது என்ற இடங்களை தேடி கொண்டிருக்கும். ஆனால் வைரஸ் தானாக எங்கும் செல்லமுடியாது. மக்கள் ஊடாகவே செல்ல முடியும். 30 வீதமானோர் தடுப்பூசி பெறாவிடினும் அந்த 30 வீதமானோரை இந்த வைரஸ் சென்றடைவது மிகவும் கடினமாகும். அப்படியான சந்தர்ப்பத்தில்  படிப்படியாக இலங்கையிலிருந்து அழிந்துவிடும். அப்படியொரு சந்தர்ப்பம் ஏற்பட்ட பின்னர் சுகாதார அறிவுறுத்தல் கட்டுப்பாடுகளை தளர்த்தலாம்.

கேள்வி: முதலாவது தடுப்பூசி பெற்றுக் கொண்டு எவ்வளவு கால இடைவெளியில் அடுத்த தடுப்பூசி பெறப்படவேண்டும்? 

பதில்: பத்து கிழமைகள் இடைவெளியில் இரண்டாவது தடுப்பூசியை பெற வேண்டும்.

கேள்வி: இலங்கையில் தடுப்பூசி பெற்றுக்கொண்ட பின்னர் பக்க விளைவுகள் தொடர்பாக ஏதாவது நிலைமைகள் காணப்படுகின்றனவா?

பதில்: இதுவரைக்கும் இலங்கையிலும் இவ்வாறான நிலைமை ஏற்படவில்லை. இந்தியாவிலும் இவ்வாறான நிலை ஏற்படவில்லை. ஏன் உலகில் கூட  இந்த நிலை  ஏற்படவில்லை. அதாவது இந்தியாவின் கொவிசீல்ட் தடுப்பூசி எடுத்தவர்களுக்கு பிரச்சனை ஏற்படவில்லை.  பாரதூரமான பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை. இது தொடர்பாக நாங்கள் ஆதாரபூர்வமாக பக்க விளைவுகள் தொடர்பாக ஆராய்ந்து கூறுகிறோம். கோடிக்கணக்கான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட பின்னரே இதனை நாங்கள் உறுதியாக கூறுகின்றோம். 

கேள்வி: அதாவது காய்ச்சல் போன்ற நிலைமை? 

பதில்: சாதாரணமாக ஒரு தடுப்பூசி போடும்போது அடுத்த நாள் காய்ச்சல் உடம்பு வலி போன்ற போன்றவை இருக்கும். எல்லாருக்கும் இது வரும் என்று கூறமுடியாது. சிலருக்கு வரலாம் சிலருக்கு வராமல் விடலாம். அதாவது உடம்பில் குறித்த தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்போது இவ்வாறான நிலைமைகள் ஏற்படும். காய்ச்சல் உடம்பு வலி என்பன வரலாம். அப்படி வந்தால் உண்மையில் அதனை நீங்கள் சந்தோசமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். காரணம் உங்கள் உடம்பில் தடுப்பூசி வேலை செய்ய ஆரம்பித்து விட்டது என்பதே அதன் அர்த்தமாகும். ஆனால் அவ்வாறு காய்ச்சல் உடம்பு வலி வராதவர்களுக்கு தடுப்பூசி வேலை செய்யவில்லை என்று அர்த்தமில்லை.  வருகின்றவர்கள் சந்தோஷப்படலாம்.   

கேள்வி: தடுப்பூசி பெற்றுக் கொண்டதன் பின்னர் காய்ச்சல் வருவது அல்லது உடம்பு வலி வருவது தொடர்பில் அச்சமடைய வேண்டாம்   என்று கூறுகிறீர்களா?

பதில்: நிச்சயமாக பயப்பட வேண்டாம். அப்படி வந்தால் சந்தோஷம் அடையுங்கள். காரணம் தடுப்பூசி உங்கள் உடலில் தொழிற்பட ஆரம்பித்திருக்கிறது என்று புரிந்துகொள்ளுங்கள். 

கேள்வி: தடுப்பூசி தொடர்பாக மக்களுக்கு நீங்கள் கூற விரும்பும் செய்தி என்ன?

பதில்: வடமாகாணத்தில் நான் தடுப்பூசி பெற்றுக்கொண்டிருக்கின்றேன். நான் ஏன் இந்த தடுப்பூசியை பெற்றுக் கொண்டேன் என்பதற்கு மூன்று காரணங்களை அப்போது கூறியிருந்தேன். அதாவது நான் என்னை நேசிக்கிறேன். அதனால் எனக்கு கொரோனா வைரஸ் தொற்றாமல் இருப்பதற்காக தடுப்பூசி போடுகிறேன். நான் என்னுடைய குடும்பத்தை நேசிக்கிறேன். எனவே வைரஸை வீட்டுக்கு கொண்டுசெல்லக்கூடாது என்பதற்காக தடுப்பூசி எடுக்கிறேன். அடுத்ததாக நான் எனது நாட்டை நேசிக்கிறேன்.  இந்த தடுப்பூசி நாட்டிலிருந்து கொரோனாவை விரட்டும்.  அதனால் தடுப்பூசியை போடுகிறேன்.  

இதனை நான் மக்களுக்கும் கூறுகிறேன். எனவே மக்கள் நம்பிக்கையுடன் ஆர்வமுடன் தடுப்பூசியை பெறவேண்டும். 

கேள்வி: விடிவுகாலம் ஒன்று தெரிகிறதா?

பதில்: நிச்சயமாக விடிவுகாலம் ஒன்று தெரிகிறது. கடந்த சில மாதங்களாக நாங்கள் பாரிய கஷ்டங்களை எதிர் கொண்டிருக்கிறோம்.  தனிமைப்படுத்தல் முடக்கம் போன்ற பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளோம். எங்களுக்கு தற்போது ஒரு தீர்வு கிடைத்திருக்கிறது.  தடுப்பூசி கிடைத்துவிட்டது. சரியான முறையில் இந்த தடுப்பூசியை பெற்றுக் கொண்டுவிட்டால் இந்த பிரச்சினையில் இருந்து நாம் வெளியே வரலாம். பழைய நிலைமை ஏற்படும். மக்கள் சந்தோசமாக வாழ்வார்கள். கொரோனா என்ற அரக்கனை அழிப்பதற்கு எமக்கு கிடைத்த மாபெரும் சக்தியே  இந்த தடுப்பூசியாகும். அதனை நாங்கள் சரியாக பயன்படுத்தினால் வைரஸ் அழிக்கப்பட்டும். அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் தடுப்பூசிகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றன.  

கேள்வி: யார் இந்த தடுப்பூசிகளை போடக்கூடாது?

பதில்: இது ஒரு முக்கியமான விடயம் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசி போதுமான பாதுகாப்பானது என்று இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. கர்ப்பிணிகளுக்கு இது பாதுகாப்பானது என இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. கடுமையான ஒவ்வாமை உள்ளவர்கள் இந்த தடுப்பூசியை மருத்துவமனையில் மருத்துவ பாதுகாபான  சூழலில் மருத்துவ ஆலோசனையுடன் போட வேண்டும். 

கேள்வி: இலங்கையில் 70 வீதமானவர்களுக்கு சுமார் எவ்வளவு காலத்தில் தடுப்பூசியை வழங்கி முடிக்கலாம்? 

பதில்: இன்னும் ஒரு ஆறு மாதங்களில் 70 விதமான மக்களுக்கு இதனை போட்டு முடிக்கலாம் என்று நம்புகிறோம்.  

கேள்வி: ஏற்கனவே கொரோனா தொற்று உள்ளவர்கள் இந்த தடுப்பூசியை போடலாமா?

 பதில்: தொற்று உள்ளவர்களுக்கு இந்த தடுப்பூசி போடப்படாது. ஆனால் அவர்கள் அந்த வைரஸிலிருந்து சுகமடைந்த பின்னர் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம். வேறு தொற்றுநோய்கள் ஏதாவது இருந்தாலும் அவர்களுக்கு அந்த தடுப்பூசி போடப்படாது.  ஆனால் தொற்றாநோய் உள்ளவர்களுக்கு நிச்சயமாக இந்த தடுப்பூசி போடப்படும். நீரிழிவு, இருதய நோய், உயர் குருதி அமுக்கம், வலிப்பு, புற்றுநோய் போன்ற நோய்கள் இருக்கின்றவர்களுக்கு தடுப்பூசி போடப்படும். மறுபுறம் தொற்று நோய்களான நியூமோனியா,  டெங்கு போன்ற நோயுள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படாது.   ஆனால் அவற்றிலிருந்து சுகமடைந்ததன் பின்னர் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம். குறிப்பாக தொற்றா நோய் உள்ளவர்களுக்கு நாம் முக்கியத்துவம் அளிக்கின்றோம். காரணம் அவர்களுக்கு தொற்று ஏற்படும்போது பாதிப்பு அதிகம். மேலும்  ஒருவர் கொலஸ்ட்ரோல் அல்லது நீரிழிவு போன்றவற்றுக்கு மருந்துகள் எடுப்பவராக இருந்தால் அவர்கள் குறித்த தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னரும் தொற்றா நோய்க்கான மருந்துகளை நிறுத்தி விடக்கூடாது.  தொடர்ந்து அந்த மருந்துகளை எடுக்க வேண்டும். 

(டாக்டர் கேசவன் எபோலா வைரஸ் தாக்கத்தின்போது 2015 ஆம் ஆண்டளவில் லைபீரியாவில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஊடாக பணியாற்றிய அனுபவம் உள்ளவர்)  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04