பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கியை கொலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவிட்டதாக அமெரிக்க புலனாய்வுத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கி, அமெரிக்காவின் வொஷங்டன் போஸ்ட் பத்திரிகையில் சவுதி அரசாங்கத்தையும் அந்நாட்டு மன்னர் மற்றும் பட்டத்து இளவரசரையும் விமர்சித்து செய்திகள் மற்றும் கட்டுரைகளை எழுதி வந்தார்.

இந்நிலையில் துருக்கி பெண் ஒருவரை ஜமால் கஷோக்கி திருமணம் செய்ய முடிவு செய்தார். இதற்காக கடந்த 2018 ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி தூதரக அலுவலகத்துக்கு ஆவணங்களை பெறுவதற்காக சென்றார்.

அப்போது அவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையை சவுதி அரேபிய அரசு தான் திட்டமிட்டு செய்ததாக துருக்கி குற்றம் சாட்டியது. வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களையும் வெளியிட்டது.

மேலும் ஜமால் கஷோக்கி கொலைக்கு சவுதி இளவரசர் முகமது பின்சல்மான் உத்தரவிட்டார் என்றும் துருக்கி தெரிவித்திருந்தது. இந்நிலையில் பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கி கொலை தொடர்பாக அமெரிக்க புலனாய்வுத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. 

அதில் ஜமால் கஷோக்கி கொலை, சவுதி இளவரசரின் உத்தரவோடு தான் நடந்திருக்கிறது என்று கூறி இருக்கிறது. ஜமால் கஷோக்கியை சூழ்ச்சி செய்து இஸ்தான்புலுக்கு வரவழைக்கப்பட்டார். துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்துக்குள் சென்ற அவர் திரும்பி வரவில்லை. அங்கு அவரை படுகொலை செய்து அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி உள்ளனர். பின்னர் உடல் பாகங்களை அசிட்டை ஊற்றி அழித்துள்ளனர்.

இந்த கொடூர செயலுக்கு கண்டிப்பாக முகமது பின்சல்மான் சம்மதித்து உத்தரவிட்டுள்ளார். ஜமால் கஷோக்கியை பிடிக்க வேண்டும் அல்லது கொலை செய்யும் திட்டத்துக்கு அவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

கொலை நடந்த முறையே சவுதி இளவரசர் பின்னணியை உணர்த்துகிறது என்று தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டை சவுதி அரேபிய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

ஜமால் கஷோக்கி கொலை தொடர்பாக அமெரிக்கா எதிர்மறையான போலியான ஏற்கமுடியாத அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் தவறான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அந்த அறிக்கையின் முடிவும் ஏற்கத்தக்கது அல்ல என்று தெரிவித்துள்ளது.