நடிகர் அருள்நிதி நடிப்பில் தயாராகி வரும்' டைரி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

கலைஞர் மு கருணாநிதி குடும்பத்தின் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த உதயநிதி, அருள்நிதி, தயாநிதி ஆகிய நிதிகளில் உதயநிதி மற்றும் தயாநிதியை காட்டிலும் அருள்நிதியின் நடிப்புத் திறமை அபாரம் என திரையுலகினர் விமர்சிப்பர். ஏனெனில் இவரது கதை தெரிவு இவருடைய திரையுலக பயணத்தில்ஏற்றத்தைத் தரும் வகையில் பொருத்தமாக இருக்கும். திரில்லர் மற்றும் ஹாரர் ஜேனரிலான கதைகளை தெரிவு செய்தாலும், ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வித்தியாசம் இருக்கும் வகையில் இவரது கதை தேர்வு இருக்கும்.' டைரி' படத்தில் இவர் பொலிசாக நடித்தாலும் இப்படத்தின் கதாபாத்திரத்திற்காக 20 கிலோ வரை எடையைக் குறைத்து, சீருடை அணியாத கம்பீரமான காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார்.

அறிமுக இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் தயாராகி வரும் முதல் திரைப்படம் 'டைரி'. இப்படத்தில் அருள்நிதி கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சிங்கப்பூரை சேர்ந்த டொக்டர் பவித்ரா நடிக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் ஜெயபிரகாஷ், ஆடுகளம் கிஷோர், ஷா ரா, சின்னத்திரை தொகுப்பாளர் தணிகை, யூடியூபர் தனம் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு ரான் ஈதன் யோகன் இசையமைக்கிறார்.

எக்சன் திரில்லராக உருவாகிவரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகர்  அருள்நிதி, துவிச்சக்கரவண்டியில் இரவு நேரத்தில் மழை பெய்து கொண்டிருக்கும் சாலையில் வர, பின்னணியில் அரசு பேருந்து ஒன்று அவர் மீது மோதும் வகையில் வருவதுபோல் வடிவமைக்கப்பட்டிருப்பதால், இதற்கு எதிர்பார்த்ததைவிட கூடுதலான வரவேற்பு கிடைத்து வருகிறது.