(எம்.மனோசித்ரா)

நாட்டில் கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகின்ற நிலையில் இன்றைய தினம் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட தாதியொருவர் உயிரிழந்துள்ளார். கொவிட்-19 தொற்றால் தாதியொருவரின் உயிரிழப்பு முதல் தடவையாக பதிவாகியுள்ளது.

மாவனெல்ல ஆதார வைத்தியசாலையிலேயே குறித்த தாதி உயிரிழந்துள்ளார். இவர் கண்டி தாதியர் பயிற்சிக் கல்லூரியில் கற்றலைப் நிறைவு செய்து 2001 ஆம் ஆண்டுமுதல் மாவனெல்ல ஆதார வைத்தியசாலையில் தாதியாக தனது பணி புரிந்து வந்ததாக அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணி வரை 487 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

அதற்கமைய நாட்டில் மொத்த கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை 82 420 ஆக அதிகரித்துள்ளது.

இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 77 625 பேர் குணமடைந்துள்ளதோடு , 4296 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை நேற்று வியாழக்கிழமை மேலும் 2 கொரோனா மரணங்கள் பதிவாகின. அத்துடன் இன்றையதினம் மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. அதற்கமைய மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 464 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றையதினம் பதிவான கொரோனா மரணங்களில், கடவத்தையை சேர்ந்த 62 வயதுடைய பெண்னொருவர் வடகொழும்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 21 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். கொவிட் தொற்றுடன் இதய நோய் மற்றும் நீரிழிவு நோய் தீவிரமடைந்தமை இவரது மரணத்திற்கான காரணமாகும்.

வத்தளையை சேர்ந்த 83 வயதுடைய பெண்ணொருவர் கிரிபத்கொட ஆதார வைத்தியசாலையிலிருந்து கொவிட் தொற்று கண்டறியப்பட்ட பின்னர் முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன் கடந்த 25 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா மற்றும் பற்றீரியா தொற்று நிலைமை இவரது மரணத்திற்கான காரணமாகும்.