எம்.நேசமணி   

கொழும்பு  துறைமுக நகர அபிவிருத்தித் திட்டம் ஒரு தொழில்நுட்ப அதிசயம் வாய்ந்ததாகும். இத்திட்டத்தின் சிறப்பு பொருளாதார வலயத்திற்குள்  1 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான வெளிநாட்டு  நேரடி முதலீடு நாட்டிற்குள் வரும்  அத்தோடு  உள்நாட்டு முதலீடுகளும் வரும் எனவே அதனூடாக தொழில் வாப்புக்கள் மாத்திரமின்றி மேலும் பல பொருளாதார வாய்ப்புகளும் எதிர்காலத்தில் இலங்கைக்கு கிடைக்கும் என கொழும்பு  துறைமுக நகரத்தின் நிர்வாக செயற்திட்டப் பணிப்பாளர் ராஜா எதிரிசூரிய தெரிவித்தார்.

வீரகேசரிக்கு அவர் வழங்கிய விசேட செவ்வியின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அச்செவ்வியின் விபரம் வருமாறு,

சிறப்பு பொருளாதார வலயம் என்றால் என்ன?

கொழும்பு துறைமுக நகரத்தில் அமையவுள்ள மிக முக்கியமான ஒன்றுதான் சர்வதேச நிதி நிலையம் இங்கு பொதுமக்களும் வசிப்பார்கள். அதாவது இந்த சர்வதேச நிதி நிலையத்தை சூழவுள்ள பகுதியில் மக்கள் வாழும் குடியிருப்புக்கள் காணப்படும். அத்தோடு பொழுதுபோக்கு அம்சங்கள், உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இங்கு அமைந்திருக்கும்.

இது கிட்டத்தட்ட ஒரு நகரத்தைப் போன்றுதான் இருக்கும். நீங்கள் வழக்கமான பிற நிதி நிலையங்களுக்குச் சென்றால் அங்கு  மக்கள் வசிக்க மாட்டார்கள். மாறாக வெறும் தொழிற்சாலைகளும், வர்த்தக கட்டிடங்களும் தான் காணப்படும். ஆனால் இங்கு மக்கள் குடியிருப்புக்களும் கலந்தேயிருக்கும். எனவேதான் இதனை சிறப்பு பொருளாதார வலையம் என்கின்றோம். இவ்வாறானதொரு சிறப்புப் பொருளாதார வலயத்தை நாம் பெறுவது இதுவே முதற்தடவையாகும். இதற்கு முன்னர் இங்கு சுதந்திர வர்த்தக வலயங்களே அமைக்கப்பட்டன. இவை  ஏற்றுமதி செயலாக்க வலயம் எனப்படும்.

இது போன்ற  12 ஏற்றுமதி வலயங்கள் தற்போது  இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ளன.  இவையனைத்தும் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக உருவாக்கப்பட்டவையாகும் அவர்கள் விசேட வரிச்சலுகைகளை  பெற்று முதலீடு செய்யலாம் வர்த்தக வலய பகுதிகளில் முதலீட்டாளர்களுக்கு சில விசேட சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளது.இது நாட்டிற்கு வருவாயைக் கொண்டுவருவதற்கான ஒரு வழிமுறையாகும். இப்போது இலங்கைக்கு ஏற்றுமதி விடயத்தைத் தாண்டி நம்மிடமுள்ள ஒன்றுதான் இந்த சிறப்பு பொருளாதார வலயம் எனப்படும் கொழும்பு துறைமுக நகரம்.   

எனது புரிதலின் படி தென்கிழக்கு ஆசியாவில் இதுதான் மிகவும் வளர்ச்சியடைந்த அதி நவீன கட்டமைப்பைக் கொண்ட சர்வதேச நிதி நிலையமாகும். நியூயோர்க் நகரத்திலும் கூட,  நிதி நிலையங்கள் உள்ளன. அவை எமது துறைமுக நகரத்தைப் போன்று உருவாக்கப்படவில்லை.

நிதி பரிவர்த்தனைகளைச் செய்வதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் கொண்ட அனைத்து உயரமான கட்டிடங்களும் அங்கு காணப்படும் . ஆனால் இங்கே நீங்கள் ஒரே நகரத்தில், அதாவது துறைமுக நகரத்தில் வசிக்கிறீர்கள், இங்கேயே சர்வதேச நிதி நிலையம் உள்ளது மாறாக மக்களது பொழுது போக்கு அம்சங்களும் சூழவுள்ளன ஆகையினால் தான் இதனை சிறப்பி பொருளாதார வலயம் என அழைக்கின்றோம்.

கொழும்பு  துறைமுக நகரத் திட்டம்  அல்லது சிறப்பு பொருளாதார வலையம்  நாட்டிற்கு எவ்வாறான வாய்ப்புகளை உருவாக்கும்?

கொழும்பு  துறைமுக நகர அபிவிருத்தித் திட்டம் சர்வதேச நிதி நிலையம், சர்வதேச சுகாதார பராமரிப்பு, சர்வதேச பாடசாலை, துறைமுக வசதியென உலகத்தரம் வாய்ந்த வசதிகள் அடங்கிய ஒரு திட்டமாகும். இந்த   சிறப்பு பொருளாதார வலயத்தைதிற்குள் முதலீட்டாளர்களை கொண்டு வருவதே எமது நோக்கம் .

முதலீட்டாளர்கள் இந்த வலயத்தில் முதலீடு செய்து தமது வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் போது பல்வேறு வாய்ப்புகளை உருவாகும் அதில் முக்கியமான ஒன்றாக தொழில் வாய்ப்புக்களை குறிப்பிடலாம். இலங்கையில் வேலையின்மை விகிதம் என்னவென்று எனக்கு சரியாகத் தெரியாது  அநேகமாக 10 சதவீதம்  அல்லது அதற்கு மேலிருக்கலாம்.  அபிவிருத்தியடைந்த நாடுகளில் இது  4 சதவீதத்துக்கு  குறைவானதாக உள்ளது, எனவே இது இலங்கையர்களுக்கு இருக்கும் ஒரு முக்கிய  பிரச்சினை என்றே நினைக்கிறேன்.

 இலங்கையை பொறுத்தவரை தொழில் வல்லுநர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், கணக்காளர்கள்,  என நல்ல  தகுதி பெற்ற அனைவரும் வெளிநாடு செல்வதைக் காணக்கூடியதாக உள்ளது.  புள்ளிவிவரங்களின்படி, 21,000 மாணவர்கள் சிறந்த வாய்ப்புகளுக்காகவும், அவர்களின் கல்வியைப் பெறுவதற்காகவும் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். எனவே எம்மால்   அதிக ஊதியத்துடன் சிறந்த வேலை வாய்ப்புக்களை  வழங்க முடிந்தால்  அவர்களை நாட்டிற்குள் தக்க வைத்துக் கொள்ள முடியும்.  

ராஜா எதிரிசூரிய

இப்போது நாம் உலக சந்தையுடன் போட்டியிட வேண்டும். அதற்கேற்ற முதலீட்டாளர்கள் நாட்டிற்குள் வந்து எமது சிறப்பு பொருளாதார வலயத்தைதிற்குள் முதலீடு செய்யும் போது அவர்களின் ஊடாக அதிக ஊதியத்துடனான வேலை வாய்ப்புக்கள்  எமது மக்களுக்கு கிடைக்கும்.

ஏற்றுமதித் துறையின் ஊடான  வருமானத்தையே நாம் பெரிதும் நம்பியிருந்தோம். அதாவது தேயிலை, இறப்பர், தென்னை போன்றவற்றை பயிர்செய்து அவ் உற்பத்திகளை ஏற்றுமதி செய்தே நாம் வருமானமீட்டுகின்றோம். அதேபோன்று  வெளிநாடுகளில்  வேலை செய்வோரால் அனுப்பப்படும் பணமானது இலங்கைக்கு கிடைத்து மற்றுமொரு முக்கிய வருமானமாகும் இன்று இந்த கொவிட் காரணமாக அவர்களும் அங்கு வேலைவாய்ப்பை இலந்துள்ளார்கள். வெளிநாடுகளில் அனேகமானோர் தமது தகுதிக்கு குறைந்த வேலைகளை செய்தே பணத்தை இங்கே அனுப்பினார்கள். இன்று மத்திய கிழக்கில் இருக்கும்  எமது மக்கள் நாட்டிற்கு வர முயற்சிக்கிறார்கள் கொவிட் தாக்கம் காரணமாக  - ஆடைத் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இனி நாம் தேயிலையையும் இறப்பரையும் மாத்திரம் நம்பிக்கொண்டிருக்க முடியாது.

1965 சிங்கப்பூர் இலங்கையைப் பார்த்து, ‘நாங்கள் அப்படி இருக்க விரும்புகிறோம்’ என்றது. இன்று சிங்கப்பூரைப் பாருங்கள்.  எவ்வளவு முன்னேற்றம். ஏன் சிங்கப்பூரில் சிறந்த கொள்கைகள் இருந்தன, எனவே தான் நாமும் நாடங்டை முன்னேற்றும் வகையிலான இவ்வாறான திட்டங்களை முன்னெடுக்கின்னோம்.

சிறப்பு பொருளாதார வலையத்ற்குள்  1 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அதிகமான வெளிநாட்டு  நேரடி முதலீடு  நாட்டிற்குள் வரும்  அத்தோடு  உள்நாட்டு முதலீடுகளும் வரும் அதனால் தொழில் வாப்புக்கள் மாத்திரமின்றி மேலும் பல  பொருளாதார வாய்ப்புகளும் நாட்டுக்கும் நாட்டு  மக்களுக்கும் கிடைக்கும். நமது தனிநபர் வருமானம் உயரும் எனவே  மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கான நல்ல சூழல் இந்த துறைமுகத் திட்டத்தின் ஊடாக காணப்படுகிறது.

இத்திட்டம் இன்னும் 20 ஆண்டுகளில் நிறைவிபெற்றதும் சுமார் 210,000 வேலைவாய்ப்புக்கள் உருவாகும் அவற்றில் 131,000 நேரடி வேலைவாய்ப்புக்களும் சுமார் 78,000 மறைமுக வேலைவாய்ப்புக்களும் உருவாகும். இவை தவிர அங்கு அமையப் பெரும் உணவகங்கள், குடியிருப்புக்கள் போன்றவற்றுக்கான காய்கறிகள், பழங்கள், இறைச்சி போன்ற பல்வேறு பொருட்கள் நாள்தோரும் விநியோகிக்க வேண்டி ஏற்படும் இவையெல்லாம் எமக்கு நல்ல வாய்ப்புக்களாகவே அமையப்போகின்றன.  எனவே  இலங்கையில் முதலீடு செய்வதற்கு இதுவே நல்ல தருணம் என்று சொல்லலாம்.

துறைமுக நகரத்துக்கே ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதே அது பற்றி தெளிவுபடுத்த முடியுமா ?

ஒரு நாட்டில் நல்ல சட்டங்கள் இல்லாவிட்டால் எந்த முதலீட்டாளரும் வரமாட்டார். நமது நாட்டில் நல்ல சட்டங்கள் உள்ளன  ஆனால் நாட்டில் முதலீடு செய்ய யாராவது முதலீட்டாளர்கள் வரும்போது அடிப்படை வேலைகளை செய்து கொள்வதில் மிகுந்த சிறமங்களை எதிர் நோக்குகிறார்கள். அதனால் சிலர் பின்வாங்கும் நிலைமைகளும் காணப்படுகிறது எனவே அவ்வாறான தடைகளை நீக்கி அவர்களுக்கு துரிதமாக அடிப்படை வேலைகளை செய்து கொடுப்பதற்கும் அவர்களுக்கான சேவைகளை தங்கு தடையின்றி செய்துகொடுப்பதற்காகவும் விசேடமா அமைக்கப்பட்டதே இந்த ஆணைக்குழு.

 நாட்டின் ஏனைய பகுதிகளில் காணப்படும் வழக்கமான சட்டங்கள் விட இது சற்று வேறுபட்டிருக்கும். ஏனெனில் நிதி நிலையம், வர்த்தக சட்டங்களின் கீழ் இயங்குகிறது.  இங்கு சர்வதேச முதலீட்டாளர்கள் வருகின்றனர். எனவே நாம்  இங்கு தண்ணீர் வெட்டுகின்றோம் என்றோ அல்லது  மின்சாரம் வெட்டப்படுகின்றது என்றோ கூற முடியாது . அவ்வாறு சிக்கலான நிலைமை காணப்படின் அதற்கான துரித மாற்று ஏற்பாடுகளை செய்யவேண்டும். எனவே அதனை சாதாரணமாக நகர சபையிடமோ அல்லது மின்சார சபையிடமோ விட்டுவிட்டு இருந்துவிட முடியாது. ஆகையினால் தான் இந்த ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

 வெளிநாட்டு முதலீட்டாளர் ஒரு பில்லியன் டொலர்களைக் இங்கு முதலிட வருகிறார்கள், எனவே அவர்களுக்கான சகல தேவைகளையும்   24 மணிநேரமும் வழங்கவேண்டும் அவற்றையெல்லாம் கருத்திற் கொண்டே  இவ்வாறான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவே நினைக்கின்றேன்.

உங்களுக்குத் தெரியும் கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியை பராமரிக்க  கொழும்பு மாநகர சபை உள்ளது அதற்கு ஒரு மேயரும் இருக்கின்றார். ஆனால் இந்த நகரத்தை விட வித்தியாசமானதாக கொழும்பு துறைமுக நகரம் இருக்கப்போகிறது.  வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வந்து முதலீடு செய்கிறார்கள், இதனூடாக எதிர்காலத்தில் நமது பொருளாதாரத்திற்கு 20% பங்களிப்பு கிடைக்கப்போகிறது. இது எங்கள் எதிர்காலம். எனவே அதில் விசேட கவனம் செலுத்தவேண்டும். அத்தோடு இந்த விசேட பகுதியை நிர்வகிக்க அதனை முகாமைத்துவம் செய்யவென பாரிய பொறுப்பு காணப்படுகிறது. இவற்றையெல்லாம் துரிதமாகவும் முறையாகவும் செய்யவேண்டும். ஆகையினால்தான் இந்த துறைமுக நகரம் நேரடியாக ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

விசேடமாக இங்கு ஒரு திட்டத்தை நீங்கள் சமர்ப்பித்தால் அதற்கு இந்த ஆணைக்குழு 14 நாட்களில் ஒரு பதிலை கொடுக்கும்  அப்படியே கொஞ்சம் காலம் எடுத்தால் 30 நாட்களுக்குள் நீங்கள் சமர்ப்பித்த திட்டங்கள் குறித்து அறிந்துகொள்ள அறியமுயும் . ‍எனவே துரிதமான செயற்பட்டு இந்த விசேட பகுதிக்குத் தேவையான அனைத்தும் இந்த அணைக்குழுவினூடாக முன்னெடுக்கப்படும்.

எனவே இங்கு வெளிநாட்டவர்கள் மாத்திரம் அல்ல தமிழர்களும், சிங்களவர்களும், முஸ்லிம்களும் என அனைவரும் முதலீடு செய்யவேண்டும் என்பதுதான் எமது விருப்பம். உண்மையிலேயே இலங்கையில் முதலீடு செய்வதற்து இது நல்ல தருணம் என்பதையும்  நான் செல்ல விரும்பிகிறேன்.

கொழும்பு துறைமுக நகரத்திட்டத்தின் தற்போதைய நிலை எப்படி உள்ளது. எவ்வளவு காலத்தில் மக்கள் ‍இங்கு பிரவேசிக்கலாம்?

துறைமுக நகரத்திட்டத்திற்கான அடிப்படை வேலைத் திட்டங்கள் 2019  ஆம் ஆண்டே  முடிந்துவிட்டன. அதாவது 269 ஹெக்டெயர் கடல் பரப்பு முழுமையாக மணல் நிரப்பப்பட்டுள்ளது. அதையும் தாண்டி கீழ்கட்டுமான வேலைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.கோல்ஃப் மைதானம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் கொவிட் நிலைமை காரணமாக தற்போது பயன்படுத்தப்படாமல உள்ளது.

துறைமுக நகரத்திட்ட வேலைகள்  தொடர்கின்றன. தற்போது 2000 பேர் வரை இங்கு வேலை செய்கிறார்கள்.

நீர் விநியோக இணைப்பு , கழிவுநீர் வெளியேற்றம் , எரிவாயு நிலையங்களுக்கான கீழ்கட்டுமான வேலைகள் என நிலத்தடி வேலைகள் பல முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. முழுமையான பணிகளும் நிறைவடைய இன்னும் 20 வருடங்கள் எடுக்குமென திட்டமிடப்பட்டிருந்தாலும் கூட பொதுமக்கள் அனுபவிக்கக்கூடிய பல்வேறு அம்சங்கள் விரைவில் நிறைவடையும் எனவே கொவிட் நிலைமையும் ஓரளவு சீரானதும் பொதுமக்கள் துறைமுக நகரப்பகுதிக்குள் பிரவேசிக்க அனுமதியளிக்கப்படும்.

மிகவிசாலமான செயற்கை கடற்கறை போன்றவற்றை வெகுவிரைவில் பொதுமக்கள் அனுபவிக்கலாம். கொவிட் வைரஸ் பரவல் காரணமாக இத்திட்டத்துக்கான முதலீட்டாளர்களை கொண்டு வருவது மிக சிரமமாக இருந்தது. இந்நிலையில் அண்மையில் சர்வதேச முதலீட்டாளர் ஒருவர் இங்கு வந்து திட்டப்பணிகளை பார்வையிட்டுச் சென்றுள்ளார். தற்போது கொவிட் வைரஸ் தடுப்புக்கான தடுப்பூசிகள் 5 இலட்சம் இந்தியாவால் வழங்கப்பட்டுள்ளது. எனவே இத்திட்டத்தை பார்வையிடுவதற்கு மேலும் பல வெளிநாட்டவர்கள் வருவார்கள் என்று நம்புகின்றோம். ஏற்கனவே பிரவுன்ஸ் நிறுவனம் இத்திட்டத்தில் முதலீடு செய்துள்ளது.  

பிரமாண்டமான கட்டடங்கள் வருவதற்கு இன்னும் காலமெடுக்கும் ஆனால் பிற பொழுதுபோக்கு அம்சங்கள் விரைவில் பொதுமக்களுக்கு கிடைக்கும் அதற்கேற்றவகையில் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பொறியியலாளரான  நீங்கள் பல்வேறு நாடுகளில் உயர் பதவிகளில் இருந்துள்ளீர்கள் அந்த அனுபவத்தினை துறைமுக நகரத்திட்டத்துக்கள் எவ்வாறு பயன்படுத்தப் போகிறீர்கள்?

திறமை மற்றும் அனுபவத்தைக்கொண்டு சிறந்த நிர்வாகத்தினை நடத்தமுடியும் என நான் கருதுகிறேன். பொறியியல் துறையில் சுமார் 40 ஆண்டுகால அனுபவம் எனக்கு உள்ளது. பல்வேறு நாடுகளில் தனியார் தறையில் பணிப்புரிந்துளளேன் எனவே அந்த அனுபவம் மற்றும் எனது திறமையினை கொண்டு கொழும்பு துறைமுக நகரத்திட்டப் பணிகளை சிறப்புற செய்யமுடியும் என்பது எனது எண்ணம்.

படம் சுஜீவகுமார்