(செ.தேன்மொழி)

சிலாபம் பொலிஸ் நிலையத்தில் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்த முயற்சித்த அதே பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த பொலிஸ் உத்தியோகத்தர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

சிலாபம் பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவரை தனது கடமைநேர துப்பாக்கியால் சுடுவதற்கு முயற்சித்துள்ளதாகவும் , இதன்போது அங்கிருந்த பிரிதொரு பொலிஸ் உத்தியோகத்தர் அதனை தடுத்துள்ளதாகவும் தெரியவந்ததை அடுத்து அது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

நேற்று முன்தினம் இரவுமுதல் நேற்று காலை ஆறு மணிவரையில் மதுபோதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை அடையாளம் காணுவதற்காக விசேட சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பில் பொலிஸ் பரிசோதகருக்கும் மற்றய பொலிஸ் உத்தியோகத்தருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன்போது பொலிஸ் உத்தியோகத்தர் பொலிஸ் பரிசோதகர் மீது துப்பாக்கி சூட்டை நடத்த முயற்சித்துள்ளதுடன் , அவ்விடத்தில் இருந்த இன்னுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அதனை தடுத்துள்ளார். குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பணியிடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.