(எம்.மனோசித்ரா)

கொவிட்-19 தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதித்து , சுகாதார அமைச்சினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமையை அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் வரவேற்றுள்ளன. 

 

நேற்று வியாழக்கிழமை இரவு குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்த நிலையில் , பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் இன்று டுவிட்டர் பதிவொன்றை இட்டு இந்த தீர்மானம் வரவேற்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளனர்.

' கொவிட் 19 ல் இறப்பவர்களுக்கு அடக்கம் செய்ய அனுமதிக்கும் இலங்கை அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வரவேற்கிறேன். 

இந்த தீர்மானத்தை எடுத்தமைக்காக இலங்கை தலைமைத்துவத்திற்கு நன்றி கூறுகிறேன்.' என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க தூதுவர் டெப்லிட்ஸ் தனது டுவிட்டர் பதிவில் , ' வரவேற்கத்தக்க செய்தி. நீண்ட கால தாமதம். தமது உறவுகளை இழந்தவர்களை துன்பப்படுத்துவதால் குடும்பங்களின் துயரங்களை சேகரிப்பதை தவிர்ப்பதற்காக இந்த மாற்றம் உடனடியாக செயல்படுத்தப்படும் என்று நம்புகிறேன்.' என்று குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கொவிட் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதியளிக்கப்படும் என்று பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தார். பின்னர் அந்த தீர்மானம் தொடர்பில் முரண்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட போது அமெரிக்க தூதுவர் அது தொடர்பில் கவலையை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.