இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் தனது 89 ஆவது வயதில் இன்று காலமானார். 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் தேசியக்குழு உறுப்பினருமான தா.பாண்டியன் வயது முதிர்ச்சி காரணமாக கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். 

நேற்றுமுன்தினம் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததால், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து அவருக்கு தீவிர அவசர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. 

இந்நிலையில், தா.பாண்டியனுக்கு சிறுநீரக பிரச்சினை, நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் இருந்ததால், அவரின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையிலே இருந்து வந்துள்ளது. 

இந்நிலையில், தொடர்ந்து தீவிர சிகிச்சையில் இருந்த தா. பாண்டியன், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.