(செ.தேன்மொழி)

இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ விருந்துபசாரம் வழங்காமைக்கு  வெளிநாடொன்றின்  அழுத்தமா காரணம் என கேள்வி எழுப்பியுள்ள ஐக்கிய தேசியக் கட்சி , பாராளுமன்ற உரையை இரத்து செய்தமை குறித்தும் சந்தேகம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது .

இது குறித்து மேலும் தெளிவுப்படுத்திய  வஜிர அபேவர்தன கூறுகையில் ,

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ விருந்துபசாரம் வழங்காமைக்கான காரணம் என்னவென்று தெரிய வில்லை.  இதற்கு முன்னர் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இலங்கை வந்தபோது , அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தனித்தனியாக விருந்துபசாரங்களை வழங்கியிருந்தனர்.

இதேவேளை , முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்காவின் ஆட்சிகாலத்தில் ,அப்போதைய பாகிஸ்தான் பிரதமரான பர்வேஸ் முஷாரப் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்தார். இதன்போது ஜனாதிபதி சந்திரிக்கா மற்றும் அப்போதைய பிரதமராக செயற்பட்ட ரணில் விக்கிரமசிங்கவும் தனித்தனியாக விருந்துபசாரம் வழங்கினர். இவ்வாறு இலங்கைக்கு வருவகைத்தரும் வெளிநாட்டு தலைவர்களுக்கு உபசரிப்புகளை செய்வதானது காலகாலமாக பின்பற்றப்பட்டு வரும் செயற்பாடாகும்.

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மாத்திரமே விருந்துபசாரம் அளித்திருந்தார். இந்த விருந்துபசாரத்தில் 150 பேர் வரையில் கலந்துக் கொண்டிருந்தனர். அதற்கமைய 200 பேர் உள்ள பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் பிரதமரின் உரையை நடத்த அனுமதிக்காமையும் ஜனாதிபதி விருந்துபச்சாரத்தை வழங்காமையும் பெரும் சந்தேகத்தையே தோற்றுவிக்கின்றது என தெரிவித்தார்.