ஈரானின் ஆதரவுடைய போராளிகளால் கிழக்கு சிரியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலைகள் மீது அமெரிக்க இராணுவம் வியாழக்கிழமை பிற்பகுதியில் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

ஈராக்கில் அமெரிக்க படைகள் மீது அண்மையில் நடந்த ரொக்கெட் தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாகவே இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது.

"ஜனாதிபதி ஜோ பைடனின் வழிகாட்டுதலில், அமெரிக்க இராணுவப் படைகள் இன்று (வியாழன்) மாலை கிழக்கு சிரியாவில் ஈரானிய ஆதரவு போராளி குழுக்களால் பயன்படுத்தப்பட்ட உள்கட்டமைப்புக்கு எதிராக வான்வழித் தாக்குதல்களை நடத்தியது" என்று பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

கடாப் ஹெஸ்பொல்லா (கே.எச்) மற்றும் கட்டாப் சயீத் அல்-ஷுஹாதா (கே.எஸ்.எஸ்) உள்ளிட்ட பல ஈரானிய ஆதரவு போராளி குழுக்கள் பயன்படுத்திய எல்லைக் கட்டுப்பாட்டு இடத்தில் பல தளங்கள் இந்த தாக்குதலின்போது அழிக்கப்பட்டுள்ளன.

இந்த தாக்குதலின் ஈரான் சார்பு போராளிகள் 17 பேர் கொல்லப்பட்டதாக மனித உரிமைகளுக்கான சிரிய ஆய்வகம் தெரிவித்துள்ளதாக ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

ஏறக்குறைய இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஈராக்கின் ஏர்பில் விமான நிலையத்திற்குள் பிரதான இராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பின்னர் அமெரிக்காவின் இந் நடவடிக்கை அரங்கேறியுள்ளது.

ஏயர்பில் விமான நிலைய தாக்குதல் ஒரு வெளிநாட்டு சிவில் ஒப்பந்தக்காரரைக் உயிரிழக்க செய்தது மற்றும் ஒரு அமெரிக்க சிப்பாய் உட்பட குறைந்தது 9 பேரைக் காயப்படுத்தியது. 

2014 முதல் ஐ.எஸ்.ஐ.எல் (ஐ.எஸ்.ஐ.எஸ்) என்ற ஆயுதக் குழுவை எதிர்த்துப் போராட ஈராக்கிற்கு உதவிய அமெரிக்கா தலைமையிலான கூட்டணியின் ஒரு பகுதியாக வெளிநாட்டு படைகள் குறித்த பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன.