(எம்.மனோசித்ரா)

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களிலுள்ள 60 வயதிற்கு மேற்பட்ட சகலருக்கும் கொவிட் தடுப்பூசி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

நாளை சனிக்கிழமை முதல் இதற்கான வேலைத்திட்டம் ஆரம்பமாகும் என்று கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் குறித்த வயதெண்ணிக்கைக்கு இடைப்பட்ட ஒரு இலட்சத்து 1,5000 பேர் வாழகின்றனர். அடுத்த இரு வாரங்களில் இவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் செயற்திட்டத்தை செய்து முடிக்க எதிர்பார்த்துள்ளோம்.

கொவிட் வைரஸ் பரவல் அதிகமாகக் காணப்படும் பகுதியாக மேல் மாகாணம் குறிப்பாக கொழும்பு மாவட்டம் காணப்படுகிறது. எனவே தான் 60 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் தடுப்பூசியை வழங்க தீர்மானித்துள்ளோம்.

கொழும்பு 1 தொடக்கம் 15 வரையான பகுதிகளிலுள்ளவர்களுக்கு தடுப்பூசியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனைப் பெற்றுக் கொள்ள விரும்புபவர்கள் பொது சுகாதார பரிசோதகர் அலுவலகத்தில் தம்மை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

சரியான தகவல்களை வழங்கி பதிவு செய்ததன் பின்னர் பொது சுகாதார பரிசோதகர்கள் அல்லது உரிய மருத்துவ அதிகாரிகளால் அறிவிக்கப்படும் போது தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் கூறினார்.