(எம்.ஆர்.எம்.வசீம்)

நாடு பாரிய பிரச்சினைகளுக்கு ஆளாகி இருக்கும் நிலையில் ஜெனீவா மனித உரிமை பேரவையுடன் பிரச்சினை ஏற்படுத்திக்கொள்ளாதவகையில் அரசாங்கம் பாதுகாத்துக்கொள்ளவேண்டும். 

மனித உரிமை பேரவை எமக்கெதிராக கடும்தீர்மானங்குக்கு சென்றால் அதனால் மக்கள் பாரிய பிரச்சினைக்கு முகம்கொடுக்கவேண்டிவரும் என சமூக நீதிக்கான தேசிய அமைப்பின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கருஜயசூரிய தெரிவித்தார்.

சமூக நீதிக்கான தேசிய அமைப்பு இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

எமது நாடு சிக்குண்டுள்ள நூல் பந்துபோல், அனைத்து பக்கத்தாலும் சிக்குப்பட்டிருக்கின்றது. ஒரு பக்கத்தால் கொவிட் தொற்று காரணமாக மக்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சிக்குள்ளாகி இருக்கின்றது. வாழ்க்கைச்செலவு உயர்ந்துள்ளது. 3வேளை உண்ணாமல் இருக்கும் பல குடும்பங்கள் இன்று எமது நாட்டில் இருக்கின்றன.

இவ்வாறு ஒரு பக்கத்தால் நாடு சிக்கிக்கொண்டிருக்கையில் அடுத்த பக்கமாக, உலகில் பலம்மிக்க நாடுகள் சில இலங்கைக்கு எதிராக மனித உரிமை பேரவையில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருக்கின்றது. அதில்  பொருளாதார தடை விதிப்பது தொடர்பாக பேசப்படுகின்றது.

பிரித்தானியா, ஜேர்மன், கனடா உட்பட இலங்கை தொடர்பாக செயற்பட்டுவரும் குழுக்களுக்கு சொந்தமான சில நாடுகளால் இலங்கை தொடர்பாக தெரிவிக்கப்பட்டிருக்கும் பிரேரணையின் முதலாவது சட்டமூலம், கடந்த தினம் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த பிரேரணை தொடர்பில் மார்ச் முதலாம் திகதி கலந்துரையாட இருக்கின்றது.

குறிப்பிட்ட பிரேரணையின் உள்ளடக்கம் தொடர்பாக கவனம் செலுத்தும்போது, எமது நாட்டுக்கு பாரிய சவாலான நிலைமை இருக்கின்றது. அதனால் நாங்கள் நாடு என்றவகையில் இதுதொடர்பாக மிகவும் தீவிரமாக கவனம் செலுத்தவேண்டும். இதன்போது அரசாங்கம் மிகவும் புத்தியுடனும் முதிர்ச்சிமிக்க  ராஜதந்திரமாகவும்  நாட்டுக்காக முன்னின்று செயற்படும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

அவ்வாறு செயற்படாமல், இந்த பிரச்சினையை நாங்கள் மேலும் பிரச்சினையாக்கிக்கொண்டால், அதன் காரணமாகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை ஏதாவது தீர்மானத்துக்கு வந்தால், அதில் பாதிக்கப்படப்போவது நாட்டின் ஆட்சியாளர்களோ அரசியல்வாதிகளோ அல்ல. சாதாரண மக்களாகும்.

மேலும் நாட்டின் பொருளாதாரம் வரலாற்றில் எந்தவொரு காலத்திலும் காணமுடியாத அளவுக்கு அதல பாதாளத்துக்கு சென்றுகொண்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது. சர்வதேச ரீதியில் எடுத்துக்கொண்டாலும் இன்று எமது நாடு, பல நட்பு நாடுகளை இழந்திருக்கின்றது. இலங்கை சர்வதேசத்தால் தனிமைப்படுப்பட்டு வரும் நாடாக இருந்துவருகின்றது.

அதற்கும் அப்பால் முஸ்லிம் சமூகத்தின் பாரம்பரிய சம்பிரதாயங்களுக்கு தடைகளை ஏற்படுத்தி, கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்காத உலகில் ஒரே நாடு என்றவகையில் எமது நாடு உலக முஸ்லிம் நாடுகளால் மற்றும் மக்களின் கடும் எதிர்ப்புக்கு ஆளாகி இருக்கின்றது என்றார்