(நமது நிருபர்)

இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற அட்டூழியங்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்பாடு சரியான முறையில் இடம்பெறவில்லை. பொறுப்புக்கூறலில்  முன்னேற்றம் இல்லை. எனவே   இலங்கை குறித்து கொண்டுவரப்படும்  பிரேரணைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆதரவு வழங்க  வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியது.  

இது இவ்வாறிருக்க இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மோசமடைந்து செல்கின்றமை தொடர்பில் கனடா மிக ஆழமாக கரிசனை செலுத்தி இருக்கிறது. எனவே இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் சமாதானம் செயற்பாடுகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக கனடா  அறிவித்திருக்கிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46 ஆவது  கூட்டத் தொடரின் நேற்றைய பிரதான அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமெரிக்காவின் இராஜாங்க செயலர் அன்டனி பிலிங்கன்  மற்றும் கனடாவின் வெளியுறவு  அமைச்சர் மார்க் கார்னு ஆகியோர் இவற்றை வலியுறுத்தினர்.

 ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில்  நேற்று பிற்பகல் வரை 46 ஆவது கூட்டத் தொடரின் ஆரம்ப அமர்வுகள் நடைபெற்றன.  இதில் பல்வேறு உறுப்பு நாடுகள் மற்றும் உறுப்புரிமையற்ற நாடுகளும்  உரையாற்றின. 

அந்த வகையில் நேற்றைய தினம் அமெரிக்கா கனடா உள்ளிட்ட நாடுகள் உரையாற்றின.  இலங்கை தொடர்பான விவாதம் நேற்று மாலை நடைபெற்ற நிலையில் அதற்கு முன்னதான பிரதான அமர்விலேயே அமெரிக்கா கனடா உள்ளிட்ட நாடுகள் இவ்வாறு உரையாற்றின. 

 அமெரிக்கா 

ஆரம்பத்தில் அமெரிக்காவின் இராஜாங்க செயலர்  அன்டனி பிலிங்கன் தனது பிரதான உரையில்  இலங்கை தொடர்பாக  குறிப்பிடுகையில்,

இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற அட்டூழியங்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்பாடு சரியான முறையில் இடம்பெறாமல் இருப்பதால் இலங்கை குறித்து கொண்டுவரப்படும்  பிரேரணைகளுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆதரவு வழங்க  வேண்டும்.   முக்கியமாக கடந்தகால அட்டூழியங்கள் குறித்த பொறுப்புக்கூறல்கள் போதுமானதாக இல்லை என்றார். 

கனடா 

இதேவேளை கனடாவின் வெளியுறவு அமைச்சர் மார்க் பிரதான அமர்வில் உரையாற்றுகையில்,

இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மோசமடைந்து செல்கின்றமை தொடர்பில் கனடா மிக ஆழமாக கரிசனை செலுத்தி இருக்கிறது. குறிப்பாக மனித உரிமை காப்பாளர்கள் சிவில் சமூக அமைப்புகள் போன்றன அச்சுறுத்தலுக்கு உட்படுகின்றமை தொடர்பில் கரிசனை செலுத்தி இருக்கின்றோம்.

அதுமட்டுமன்றி நினைவுகூரல் தொடர்பான அடக்குமுறைகள் தொடர்பாகவும் கவனம் செலுத்தி இருக்கின்றோம். மேலும் சிறுபான்மை மத மக்களின்   சடலங்களை எரிப்பது தொடர்பான தீர்மானம் குறித்தும் சட்டத்தின் ஆட்சி படுத்தல் மோசமடைகிறது செல்கின்றமை தொடர்பாகவும் நாங்கள் அவதானம் செலுத்தி வருகின்றோம். 

இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை  ஆணையாளர் வெளியிட்ட அறிக்கை  இந்த மனித உரிமைப் பேரவை இலங்கையின் நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் என்பதை கோடிட்டுக் காட்டி இருக்கிறது.  அந்த வகையில் இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் சமாதானம் செயற்பாடுகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவை வழங்குவோம்.