(எம்.மனோசித்ரா)

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரபரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் நலன் கருதி பௌர்னமி தினம் என்ற போதிலும், நாளை வெள்ளிக்கிழமை ஆட்பதிவு திணைக்களம் திறக்கப்பட்டிருக்கும் என்று ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவரால் நேற்று வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மார்ச் முதலாம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ள சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள  இதுவரையில் தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளாத  பரீட்சார்த்திகளுக்கு அதனை வழங்குவதற்காக மாத்திரம் ஆட்பதிவு திணைக்களத்தை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலுள்ள பிரதான அலுவலகமும் காலி, குருணாகல், வவுனியா மற்றும் மட்டக்களப்பிலுள்ள மாவட்ட அலுவலகங்களும் காலை 8.30 மணி முதல் மதியம் 01.00 மணி வரை திறந்திருக்கும்.

சாதாரண தர பரீட்சாத்திகளுக்காக முன்னெடுக்கப்பட்ட இந்த விஷேட வேலைத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் பாடசாலை அதிபர் அல்லது கிராம உத்தியோகத்தரால் உறுதிப்படுத்தப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் வருகை தர வேண்டியது அவசியமாகும்.