இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்ட ஒருதொகை கொரோனா வைரசுக்கு எதிரான ‍மேலும் இலட்சம் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா-ஜெனெகா கோவிட் -19 தடுப்பூசிகள் சற்று முன்னர் இந்தியவிலிருந்து நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

அதன்படி 500,000 டோஸ் ஒக்ஸ்போர்டு அஸ்ட்ரா-ஜெனெகா கோவ்ஷீல்ட் தடுப்பூசி இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலமாக சற்று முன்னர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த தகவலை இந்தியன் ஏயர்லைன்ஸின் கட்டுநாயக்க விமான நிலைய மேலாளர் சரநாத் பீரிஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

தடுப்பசிகள் குறித்த சரக்கு விமானத்தில் குளிர்சாதன பெட்டியில் சேமிக்கப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவை இறக்கப்பட்டவுடன், அது இறக்குமதி சரக்கு சேமிப்பு வளாகத்தில் உள்ள குளிர்சாதன பெட்டியில் சேமிக்கப்பட்டது.

மருந்துக் கழகத்திற்கு சொந்தமான சிறப்பு குளிர்பதன வசதிகளுடனான லொறிகள் மூலம் இந்த சரக்கு மத்திய கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதேவேளை கோவேக்ஸ் திட்டத்தின் கீழ் 264,000 தடுப்பூசி அடுத்த வாரம் முதல் கிடைக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.