(எம்.மனோசித்ரா)
விஷேட அதிரடிப்படையினரால் யக்கலமுல்ல பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை 2,606 கிலோ கழிவு தேயிலை தூள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் போது சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, லொறியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், கழிவு தேயிலையுடன் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களிருவரும் யக்கலமுல்ல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட தேயிலையை பரிசோதிப்பதற்காக 11 மாதிரிகளை  இலங்கை தேயிலை சபை அதிகாரிகள் பெற்றுக் கொண்டுள்ளனர். இவை இராசாயன பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன.

'சிலோன் டி' என்ற பெயர் உலகலாவிய ரீதியில் இலங்கைக்கு பெருமை சேர்க்கும் சந்தைப் பொருளாகும். எவ்வாறிருப்பினும் இவ்வாறு கழிவு தேயிலை தூள் தயாரித்தல் , ஏற்றுமதி செய்தல் என்பன இந்த நற்பெயரை இல்லாமலாக்குவதற்கு முன்னெடுக்கப்படும்  முயற்சியாகும். அத்தோடு இலங்கையின் பொருளாதாரத்தில் பாரிய நஷ்டத்தை ஏற்படுத்தக் கூடிய செயலுமாகும். எனவே பொலிஸ் மற்றும் விஷேட அதிரடிப்படை என்பன கழிவு தேயிலை தூள் தொடர்பான கண்காணிப்புக்களை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றன.