இலங்கையுடன் தொற்றுநோய்க்கு எதிரான ஒத்துழைப்பை அதிகரிக்கவும், தொடர்ந்து நாட்டிற்கு தடுப்பூசி உதவிகளை வழங்குவதோடு, இலங்கைக்கு தொற்றுநோயை முன்கூட்டியே தோற்கடிக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவும் சீனா தயாராகவுள்ளதாக என சீன மாநில கவுன்சிலரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யி புதன்கிழமை தெரிவித்தார்.

இலங்கையின் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன உடனான தொலைபேசி உரையாடலின்போதே இதனை அவர் உறுதிபடுத்தியுள்ளதுடன், இரு நாடுகளும் நேர்மையான பரஸ்பர உதவி மற்றும் நீடித்த நட்பின் மூலோபாய கூட்டுறவு பங்காளிகள் என்று வாங் யி கூறியுள்ளதாக சீனாவின் 'xinhuanet' செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டில், இரு நாடுகளும் தொற்றுநோய்க்கு எதிராகப் போராட கைகோர்த்து ஒருவருக்கொருவர் ஆதரவளித்தன, மேலும் அவர்களின் இருதரப்பு உறவுகள் ஒரு வலுவான வளர்ச்சி வேகத்தைத் தக்க வைத்துக் கொண்டதாகவும் இதன்போது சீன வெளியுறவு அமைச்சர் கூறினார்.

அத்துடன் பட்டுப் பாதை முன்முயற்சியின் கட்டமைப்பிற்குள் ஒத்துழைப்பில் உறுதியான முன்னேற்றம் காண வாங் இரு தரப்பினருக்கும் அழைப்பு விடுத்தார்.

இதேவேளை இலங்கை வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன, இலங்கை சீனாவை அதன் நெருங்கிய நண்பராக கருதுவதாகவும், இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு, மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், உள் மற்றும் வெளிப்புற சவால்களை சமாளிப்பதற்கும் சீனா தனது நீண்டகால, தன்னலமற்ற உதவிக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தார்.

அண்மைய ஆண்டுகளில், அமெரிக்கா உட்பட சில மேற்கத்திய நாடுகள் மீண்டும் இலங்கையின் மனித உரிமை பிரச்சினைகளை சுரண்டியுள்ளதாகவும், ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா) மனித உரிமைகள் பேரவையில் இலங்கை உள்ளிட்ட வளரும் நாடுகளை ஆதாரமற்ற முறையில் குற்றம் சாட்டியுள்ளதாகவும் குணவர்தன கூறினார். 

இதற்கு பதிலளித்த சீன வெளியுறவு அமைச்சர், சீனா தொடர்ந்து நீதியை நிலைநிறுத்தி வளரும் நாடுகளுடன் நிற்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலின்போது கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி திட்டம், ஹம்பாந்தோட்டை துறைமுக விடயங்கள் உள்ளிட்டவை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.