சீனாவின் சினோவாக் பயோடெக் மருந்து நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசியின் முதல் தொகுதியை சிங்கப்பூர் செவ்வாய்க்கிழமை பெற்றுள்ளது.

இந்த கொரோனா தடுப்பூசியை சிங்கப்பூரில் பயன்படுத்த அனுமதிக்காக காத்திருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், சினோவாக் பயோடெக் மருந்து நிறுவனம் ஆரம்ப தரவுகளை சமர்ப்பிக்கத் தொடங்கியுள்ளது. ஆனால் தற்போது ஒரு முழுமையான மதிப்பீட்டை மேற்கொள்ள தேவையான அனைத்து தகவல்களையும் பெற சிங்கப்பூர் சுகாதார அறிவியல் ஆணையம் காத்திருக்கிறது என அமைச்சகம்  தெரிவித்துள்ளது.

சினோவாக்கின் தடுப்பூசியைப் பயன்படுத்த கருத்தில் கொண்ட ஒரே ஒரு பணக்கார நாடு சிங்கப்பூர் ஆகும். இந்த தடுப்பூசி  சுமார் 50 சதவீதம் முதல் 90 சதவவீதம் வரை பயனளிப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டத்தை ஆரம்பித்து வழங்கி வருகிறது. அங்கு பைசர்-பயோஎன்டெக் மற்றும் மொடர்னா ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து மற்றும் வர்த்தகத்தை பெரிதும் நம்பியுள்ள ஒரு தீவு  என்ற முறையில், சிங்கப்பூர் அரசாங்கம் தடுப்பூசியின் உதவியுடன் அதன் பொருளாதாரத்தை உயர்த்த ஆர்வமாக உள்ளது. 

சிங்கப்பூர் 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் கிட்டத்தட்ட ஆறு மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

சிங்கப்பூரில் கடந்த சில மாதங்களாக மிகக்  குறைந்த அளவிலேயே கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள்.

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை  சுமார் 60,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 29 பேர் பட்டுமே உயிரிழந்துள்ளார்கள்.

இதுவரை, சினோவாக் தடுப்பூசிக்கு  சீனா, பிரேசில், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளே அனுமதி அளித்துள்ளன.