அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு - 20 போட்டியில் 3 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரில் 2-0 என்று முன்னிலை பெற்றுள்ளது நியூசிலாந்து.

நியூசிலாந்துக்கு எதிராக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் அவுஸ்திரேலிய அணி முதலாவது போட்டியில் தோல்வியடைந்த நிலையில் இரண்டாவது போட்டி இன்று துனேடின் ஓவல் மைதானத்தில் இடம்பெற்றிருந்தது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பினை தேர்வு செய்தது.

கடந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற நியூசிலாந்து அணியின் வீரர் கான்வே இல்லாமல் களமிறங்கிய நியூசிலாந்து மார்ட்டின் கப்டில் மற்றும் கேன் வில்லியம்சனின் அபார இணைப்பாட்டம் மற்றும் ஜிம்மி நீஷத்தின் இறுதி நேர அதிவேக 45 ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 218 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்தப்போட்டியில் 8 சிக்ஸர்களை விளாசி 97 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட கப்டில் டி 20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் விளாசிய ரோஹித் ஷர்மாவின் சாதனையை முறியடித்து முதலிடத்திற்கு முன்னேறினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா மார்கஸ் ஸ்டோய்னிஸ் வேகமாக 78 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தாலும் இறுதி ஓவரில் ஆட்டமிழக்க 3 ஓட்டங்களால் வெற்றியை உறுதிப்படுத்தியது நியூசிலாந்து.

5 போட்டிகளை கொண்ட இத்தொடரில் 2-0 என்ற விகிதத்தில் நியூசிலாந்து முன்னிலையில் உள்ளத்துடன் போட்டியின் ஆட்ட நாயகனாக மார்ட்டின் கப்டில் தெரிவானார்.