(எம்.மனோசித்ரா)
இலங்கையின் ஏற்றுமதித் துறையில் பாகிஸ்தான் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனடிப்படையில் இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கிடையிலான வர்த்தக மேம்பாடு மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோர் அவதானம் செலுத்தியுள்ளனர்.

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்திருந்த பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று புதன்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்தார். இந்த சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோருக்கிடையில் நீண்ட இருதரப்பு கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த கலந்துரையாடல் மிகப் பிரயோசனமாக அமைந்ததாக பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்தார்.

 இரு நாடுகளினதும் விவசாயத்துறையை மேம்படுத்துவதற்கான தொழிநுட்ப அறிவை பகிர்ந்து கொள்ளல் தொடர்பில் அரச தலைவர்களிருவரும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

விவசாயிகளுக்கு உயர்ந்த வருமானம் மற்றும் நுகர்வோருக்கு நிவாரண விலையில் கிடைக்கக் கூடிய வகையில் விவசாயத்தை கட்டியெழுப்புவதே இலக்காகும் என அரச தலைவர்களிருவரும் தெரிவித்தனர். பாக்கிஸ்தானுடைய விவசாய பொருளாதாரம் இலங்கையின் விவசாய பொருளாதாரத்துடன் அதிகமாக ஒத்திருக்கிறது என பாகிஸ்தான் பிரதமர் கூறினார். 

மேலும், இலங்கையில் ஏற்றுமதித் துறையில் பாகிஸ்தான் முக்கிய பங்கு வகிக்கிறது. இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக மேம்பாடு மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் ஜனாதிபதி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் அவதானம் செலுத்தினர்.

கொவிட் பரவல் ஒழிப்புடன் இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்புக்களை வழங்கும் நோக்கில் பாகிஸ்தான் மக்களுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ , இரு நாடுகளுக்கும் இடையிலான  சுற்றுலாத்துறையின் முன்னேற்றத்திற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கருத்து தெரிவித்தார். தொழில்நுட்ப அறிவு பரிமாற்றம் உட்பட பல துறைகள் தொடர்பில் இரு தலைவர்களும் கவனம் செலுத்தியிருந்தமையும் குறிப்பிடதக்கது.