(நா.தனுஜா)
இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வர்த்தக முன்னேற்றத்திற்கான அடித்தளமாக பாகிஸ்தான் - இலங்கை வர்த்தக மாநாடு அமையும் என்று நிதி, மூலதனச்சந்தை மற்றும் அரசதொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் பாகிஸ்தான் வர்த்தகம் மற்றும் முதலீட்டுத்துறை அமைச்சர் அப்துல் ரஸாக் ஆகியோர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று செவ்வாய்கிழமை மாலை கொழும்பை வந்தடைந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இன்று புதன்கிழமை ஷங்ரிலா ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாகிஸ்தான் - இலங்கை வர்த்தக மாநாட்டில் கலந்துகொண்டார். அம்மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அஜித் நிவாட் கப்ரால் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையிலான வர்த்தக மாநாட்டைத் தொடர்ந்து பல புதிய முதலீடுகள் மற்றும் வர்த்தக வாய்ப்புக்கள் உருவாகும் என்று எதிர்பார்க்கின்றோம். சுதந்திரத்தின் பின்னர் எமது இருநாடுகளும் நீண்ட தூரத்தைக் கடந்து வந்துவிட்டோம். 1992 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் உலகக்கிண்ண கிரிக்கெட் கோப்பையை வென்றதுடன் 1996 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவைத் தோற்கடித்து இலங்கை அதனை வென்றது. அதனூடாக எமது இருநாடுகளாலும் பல்வேறு விடயங்களிலும் சாதிக்க முடியும் என்பதை சர்வதேசத்திற்கு உணர்த்தினோம்.

அதுமாத்திரமன்றி இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவும் நீண்டகாலமாகத் தொடர்ந்து வருகின்றது. இருப்பினும் கூட இருநாடுகளுக்கும் இடையில் வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகிய துறைகளில் ஒத்துழைப்புக்கள் குறைவாக இருப்பதாகக் கருதுகின்றேன். அதனை மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாக உள்ளது. பரஸ்பரம் எமது இருநாடுகளுக்கு இடையிலும் வர்த்தகம் சார்ந்த தொடர்புகளையும் முதலீடுகளையும் வெகுவாக அதிகரிக்கவேண்டும்.

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டதுபோன்று உலகநாடுகள் பூகோள அரசியலில் இருந்து பூகோள பொருளாதாரத்தை நோக்கி கொள்கைகளை வகுப்பது உண்மையில் வரவேற்கத்தக்க போக்காகும். அந்தவகையில் இலங்கையில் வர்த்தகத்தில் மாத்திரமன்றி கல்வி, சுகாதாரம், கைத்தொழில் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் முதலீடு செய்வதற்கு பாகிஸ்தான் முன்வரவேண்டும். பாகிஸ்தான் பிரதமரின் வருகையுடன் அது சாத்தியமாகும் என்று எதிர்பார்க்கின்றோம் என்றார்.

அதேவேளை மாநாட்டில் உரையாற்றிய பாகிஸ்தான் வர்த்தக மற்றும் முதலீட்டு அமைச்சர் அப்துல் ரஸாக் கூறியதாவது:

இருநாட்டு வர்த்தக சமூகத்தினரையும் ஓரிடத்திற்குக் கொண்டுவருவதே இந்த மாநாட்டின் நோக்கமாகும். அதனூடாக பரஸ்பர கலந்துரையாடல்களின் மூலம் புதிய சிந்தனைகள் மற்றும் வாய்ப்புக்கள் உருவாகும். ஏனெனில் இருநாடுகளினதும் வர்த்தக ரீதியான ஒத்துழைப்பை மேலும் முன்னேற்றுவதற்கான வாய்ப்புக்கள் அதிகளவில் காணப்படுகின்றன. கொரோனா வைரஸ் பரவலின் பின்னர் தற்போது மீண்டும் பாகிஸ்தான் மீட்சிப்பாதையில் பயணித்துவருகின்றது. இந்நிலையில் இந்த வர்த்தக மாநாடு இருநாடுகளினதும் வர்த்தக ரீதியான முன்னேற்றத்திற்கு அடித்தளமாக அமையும் என்று நம்புகின்றோம் என்று குறிப்பிட்டார்.