(இராஜதுரை ஹஷான்)

கட்டுநாயக்க மற்றும் புத்தளம் ஆகிய புகையிரத பாதைகளுக்கு இடையிலான புகையிரத பயணம் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) தொடக்கம் இரண்டு நாட்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

புத்தளம் பாதையின் குரண மற்றும் நீர்கொழும்பு புகையிரத நிலையங்களுக்கு இடையில் இரட்டை வழி புகையிரத பாதை நிர்மாணிக்கப்படுவதனால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதனடிப்படையில் குரண மற்றும் நீர்கொழும்பு புகையிரத நிலையங்களுக்கிடையிலான புகையிரத பாதை நாளை மறுதினம் காலை 8 மணி தொடக்கம் 28 ஆம் திகதி காலை 8.30 மணி வரை மூடப்படும்.

இக்காலப்பகுதியில் கட்டுநாயக்க மற்றும் புத்தளம் புகையிரத நிலையங்களுக்கு இடையே புகையிரத சேவை முன்னெடுக்கப்படாத காரணத்தினால் கொழும்பு கோட்டை மற்றும் கட்டுநாயக்க புகையிரத நிலையங்களுக்கு  இடையில் மாத்திரம் புகையிரத சேவை இயக்கப்படும்.

தூர பிரதேச புகையிரத சேவையில் இரவு தபால் புகையிரத சேவையில் காணப்படும் உறங்கல் இருக்கை ஆசனம் ஒதுக்கிக் கொள்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

உறங்கள் இருக்கையில் பாவிக்கப்படும் படுக்கையுறை மற்றும் தலையணை ஆகியவற்றை தூய்மைப்படுத்தும் பணிகள் சிறைச்சாலைகள் ஊடாக முன்னெடுக்கப்பட்டன. 

கொவிட்-19 வைரஸ் தொற்று சிறைச்சாலைகளில் தீவிரமடைந்துள்ளதால் இச்சேவை இடை நிறுத்தப்பட்டுள்ளது.

இப்பிரச்சினைக்கு மாற்று நடவடிக்கைகளை புகையிரத திணைக்களம் இதுவரையில் முன்னெடுக்கவில்லை. இதனால் தூரபிரதேசம் நோக்கி செல்லும் பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்க் கொண்டுள்ளார்கள்.

ஆகவே, இதற்கு சிறந்த தீர்மானத்தை விரைவில் எடுக்குமாறு வலியுறுத்துகிறோம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.