'மைனா', 'கும்கி' என வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் பிரபு சாலமன் 'அழகிய கண்ணே' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார்.

தமிழ் திரை உலகில் முன்னணி இயக்குனர்களாக வலம் வரும் கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் உள்ளிட்ட பலரும் நடிகர்களாக அறிமுகமாகி, இரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள். 

இந்நிலையில் 'மைனா', 'கும்கி' விரைவில் வெளியாக இருக்கும் 'காடன்' உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருக்கும் இயக்குனர் பிரபுசாலமன் இந்தப் பட்டியலில் விரைவில் இணையவிருக்கிறார்.

அறிமுக இயக்குனர் விஜயகுமார் இயக்கத்தில் தயாராகி வரும் 'அழகிய கண்ணே' படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குனர் பிரபுசாலமன் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். 

படத்தைப் பற்றி இயக்குனர் பிரபுசாலமன் பேசுகையில், 

' இந்தப் படத்தில் இயக்குனர் பிரபு சாலமனாக நடிக்கிறேன். இளைய படைப்பாளிகளுக்கு நம்பிக்கை தரும் வகையிலான கதாப்பாத்திரம் என்பதால் நடிக்க ஒப்புக் கொண்டேன். மார்ச் முதல் வாரத்தில் இப்படத்திற்காக ஐந்து நாட்கள் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறேன்.' என்றார்.

இந்தப்படத்தில் லியோ சிவக்குமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.