(ஆர்.யசி)

மத்தியவங்கி பிணைமுறி ஊழல் காரணமாக நாட்டின் பொருளாதாரத்தில்  145 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தாம் கருதுவதாகவும், இந்த ஊழல் குறித்த விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து பிரதான குற்றவாளியை கண்டறிய வேண்டும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் சபையில் தெரிவித்தார். மத்திய வங்கி பிணைமுறி ஊழல் குறித்த விசாரணைகள் பல இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளதாக சந்தேகம் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில், மத்திய வங்கி பிணைமுறி ஊழல் குறித்து ஆளும் கட்சி உறுப்பினர் சாந்த பண்டார கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அதற்கு பதில் தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

கடந்த 2015 ஆண்டு பெப்ரவரி தொடக்கம் 2016 மார்ச் வரையில் கையாளப்பட்டுள்ள பிணைமுறி கைமாறல்கள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையையும், மத்திய வங்கி விசாரணை குழுவின் அறிக்கையும் பார்க்கையில் இந்த காலத்தில் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய 2015 பெப்ரவரி 1 ஆம் திகதி தொடக்கம் 2016 மார்ச் 31 ஆம் திகதி வரையிலான பிணைமுறி கைமாறல்கள் மூலமாக பேர்பச்சுவல் நிறுவனத்திற்கு பெற்றுக்கொண்ட இலாபமானது 8.529 பில்லியன் ரூபாவாகும்.

இது மறுபக்கம் அரசாங்கம் மற்றும் அரச நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நட்டமாக கருதப்படுகின்றது. அதேபோல் நான்காம் கணக்காய்வு அறிக்கைக்கு அமைய இந்த பிணைமுறி மாற்றங்கள் மூலமாக அரசாங்கத்திற்கு 6.6 பில்லியன் ரூபாவில் இருந்து 9.6 பில்லியன் ரூபா வரையில் இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு மேலாக ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதாரத்திற்கும் எவ்வளவு நட்டம் ஏற்பட்டது என சரியாக கணிக்க முடியாது போனாலும் கடந்த ஒன்பது ஆண்டுகள் நான் மத்திய வங்கி ஆளுநராக இருக்கின்ற காரணத்தினால் எனது கணிப்பின் பிரகாரம் குறித்த செயற்பாடுகள் காரணமாக வட்டிவீதம் அதிகரிக்கப்பட்டதால் மாத்திரம் 145 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டிருக்கும் என கணிக்க முடியும். 2015 ஆம் ஆண்டு பெப்ரவரியில் அர்ஜுன மஹேந்திரன் மூலமாக பிணை முறி விதிமுறை மாற்றப்பட்ட நிலையில் 2017 ஜூலை மாதம் வரையில் இந்த நிலைமை காணப்பட்டது. அதன் பின்னர் வழமையான முறைமைக்கு வந்துள்ளது. எனவே இந்த காலத்தில் மிகப்பெரிய நட்டத்தை நாடு சந்தித்துள்ளது.

எவ்வாறு இருப்பினும் இந்த விடயம் குறித்து முன்னெடுக்கும் விசாரணைகள் இன்னமும் முழுமை பெறவில்லை, தொடர்ந்தும் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றே நான் கருதுகிறேன். ஏனெனில் இந்த விசாரணைகள் ஒரு சில இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

குறிப்பாக பத்து பில்லியன் உடனடி பணம் எவ்வாறு கைமாற்றப்பட்டது, மத்திய வங்கிக்கு யார் இந்த அனுமதியை கொடுத்தது என்பது குறித்த எந்த அறிக்கையும் வெளிவரவில்லை. எனவே இது குறித்து மேலும் ஆராய வேண்டும். அதேபோல் பிரதான குற்றவாளிகள் யார் என்பதை கண்டறிய வேண்டும். ஆனால் இன்னமும் அது குறித்து எந்த விசாரணையும் முன்னெடுக்கப்படவில்லை என்றார்.