(இராஜதுரை ஹஷான்)

முஸ்லிம் பிரதிநிதிகள் பாக்கிஸ்தான் நாட்டு பிரதமர் இம்ரான் கானை சந்திப்பது அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்று  கோழைத்தனமான பதிலை அரசாங்கம் குறிப்படுகிறது.

தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைகள் திட்டமிட்ட வகையில் மீறப்படுகின்றன.

அரசாங்கம் தனது பலத்தை பாதுகாத்துக் கொள்ள சிறுபான்மை சமூகத்தின் மீது வன்முறைகளை தூண்டிவிடுகிறது.  உரிமைகளை பாதுகாத்துக் கொள்ள இறுதி வரை ஒன்றினைந்து போராடுவோம் என பாராளுமன்ற உறுப்பினர்  ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கட்டாய ஜனாஸா தகனத்துக்கு எதிரான தேசிய அமைப்பு ஏற்பாடு செய்த எதிர்ப்பு போராட்டம் இன்று ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக இடம் பெற்றது.

இப்போராட்டத்தில் கலந்துக் கொண்டு ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிக்கும் முஸ்லிம் சமூகத்தினரது உடல்களை கட்டாயம் தகனம் செய்வோம் என்பதில் அரசாங்கம் உறுதியுடன் நிற்கிறது.

உடல்களை அடக்கம் செய்யலாம் என நிபுணர் குழுவின் அறிக்கையினை கூட இனவாதம் மறைத்துள்ளது.அரசாங்கத்தின் செயற்பாடுகள் கீழ்த்தரமான முறையில் காணப்படுகிறது.

நாட்டில் தமிழ்,முஸ்லிம் சமூகத்தினர் அரசாங்கத்தின் இனவாத பிடியில் பாரிய நெருக்கடிகளை எதிர்க் கொண்டுள்ளார்கள்.

இவ்விடயம் குறித்து சர்வதேச நாடுகள் அவதானம் செலுத்த வேண்டும்.

நாட்டுக்கு வருகை தந்துள்ள பாக்கிஸ்தான் நாட்டு பிரதமர் இம்ரான் கானை சந்திக்க 15 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உத்தியோகப்பூர்வமாக கோரிக்கைவிடுத்தோம். எமது கோரிக்கை மறுக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்  பாக்கிஸ்தான் நாட்டு பிரதமர் இம்ரான்கானை சந்திப்பது அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என அரசாங்கம் கோழைத்தனமாக பதிலை குறிப்பிடுகிறது.

அரசாங்கத்தின் பலவீனத்தன்மையினையும், சிறுபான்மை சமூகத்தின் மீதான அடக்குமுறையினையும் சர்வதேசம் தற்போது நன்கு அறிந்துள்ளது.

சர்வதேச அரங்கில் இலங்கையை நெருக்கடிக்குள்ளாக்குவது எமது நோக்கமல்ல. ஆனால் அரசாங்கம் அவ்வாறான நிலைக்கு எம்மை கொண்டு செல்கிறது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழக்கும் முஸ்லிம் சமூகத்தினரது ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை மாத்திரம் முன்வைத்துள்ளோம். உடல்களை அடக்கம் செய்வதால் சுற்றாடலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பதை மருத்து சான்றுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

மருத்துவ நிபுணர்களின் அறிக்கையை செயற்படுத்தவதற்கு அரசாங்கத்திடம் இனவாத கொள்கை மாத்திரம் தடையாகவுள்ளது.

ஆகவே இனவாத கொள்கையினை துறந்து  பொது தன்மையுடன் அரசாங்கம் செயற்பட வேண்டும்.உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கு தொடர்ந்து போராடுவோம் என்றார்.