பசறைப் பகுதியைச் சேர்ந்த கொஸ்கொல்லை என்ற பகுதியில் இருவருக்கிடையில் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினையொன்று, துப்பாக்கிப் பிரயோகத்தில் முற்றுப்பெற்றுள்ளது.

குறித்த துப்பாக்கிப் பிரயோக சம்பவம் நேற்று 22-02-2021 இரவு 7.30 மணியளவில், இடம்பெற்றது. 

இத்துப்பாக்கிப் பிரயோகத்தில் குறி தவறி வெடித்ததினால் எவருக்கும் எவ்வித அனர்த்தங்களும் ஏற்படவில்லை. இச்சம்பவத்தையடுத்து, அங்கு கூடிய மக்கள், துப்பாக்கிப் பிரயோகம் செய்த சனத் பண்டார என்ற 42 வயதுடைய நபரை மடக்கிப் பிடித்தனர். 

இதையடுத்து குறித்த துப்பாக்கிப் பிரயோகம் குறித்து, பசறைப் பொலிசாருக்கு தகவல் கிடைக்கவே, பொலிசார் விரைந்து சனத் பண்டாரவை கைது செய்துள்ளதுடன், துப்பாக்கிப் பிரயோகத்திற்கு பயன்படுத்திய உள்ளுர்த் தயாரிப்பு துப்பாக்கியையும் பொலிசார் மீட்டனர்.

இதன்போது கைது செய்யப்பட்ட நபரை, பசறை சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய, பசறைப் பொலிசார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

பசறை – கொஸ்கொல்லையைச் சேர்ந்த சனத் பண்டாரவிற்கும், பி.எம். ஜயசந்தர என்பவருக்குமிடையே நீர்ப்பிரச்சினையே, மேற்படி துப்பாக்கிப் பிரயோகத்திற்கு காரணமென்று, பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.