(செ.தேன்மொழி)
ஆரச்சிக்கட்டு - ஆனைவிழுந்தான் ஈரவலய பாதுகாப்பு வனப்பகுதியில் கண்டல் தாவரங்களை சேதம்படுத்தியமை தொடர்பில் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிபொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இதுத் தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, ஆராச்சிக்கட்டு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆணைவிழுந்தான் றம்பசா ஈரவலய பாதுகாப்பு வனப்பகுதியிலுள்ள, கண்டல் நிலத்தாவரங்களை சேதப்படுத்தியமை தொடர்பில் நேற்று சந்தேக நபர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன்போது ஒரு இலத்தத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கண்டல் நிலத்தாவரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகளை ஆராச்சிக்கட்டு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் நபர்கள் தொடர்பில் பொலிஸார் விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கமைய இத்தகைய நபர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றவுடனே அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இதேவேளை, இவ்வாறான நபர்கள் தொடர்பில் பொது மக்களுக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றால் 1997 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புக் கொண்டு அதுத் தொடர்பில் தெரிவிக்க முடியும்