பாகிஸ்தான் மற்றும் இலங்கை மக்களுக்கிடையேயான தொடர்பானது மிக நீண்ட காலமாக பேணப்பட்டு வருகிறது. புத்த சமயம், பாகிஸ்தானின் பகுதிகளில் செழித்தோங்கி காணப்பட்டது.

இஸ்லாத்தின் ஆரம்ப ஆண்டுகளில், மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவிற்கு வாசனைத்திரவியங்கள் மற்றும் இரத்தினகற்களை விற்பனைக்காக எடுத்துச் சென்ற இஸ்லாமிய வணிகர்கள் "செரண்டிப்" என்று அன்று அழைக்கப்பட்ட இலங்கையுடன் மிகவும் நெருக்கமானவர்களாக இருந்தனர்.
இரு நாடுகளும் சுதந்திரம் பெற்ற ஆண்டுகளில் இருந்தே இத்தொடர்ப்பைப் பேணிவருகிறது. 1948 பெப்ரவரி 04, இலங்கைக்கான சுதந்திர வாழ்த்துச்செய்தியில், காயிதே-அசாம் முஹம்மது அலி ஜின்னா, பாகிஸ்தான் - இலங்கை உறவைப் பற்றி குறிப்பிட்டிருந்தார்.

“பாகிஸ்தானுக்கு இலங்கை மீது மிகுந்த நல்லெண்ணம் உள்ளது. இந்த நல்லெண்ணம் எதிர்காலத்தில் மேலும் வலுப்பெறும். பரஸ்பர புரிந்துணர்வும் , நல்லெண்ணமும் இவ்விரு நாடுகளையும் இன்னும் நெருக்கமான நட்பிற்குள் கொண்டு செல்லும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
1971 இல் கிழக்கு பாகிஸ்தானில் போர் மூண்டபோது, பாகிஸ்தான் விமானங்களுக்கு இந்தியா தடை விதித்தபோது, சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான இலங்கையில் அப்போதைய அரசாங்கம் 174 முறை கொழும்பில் பாகிஸ்தான் விமானங்களை எரிபொருள் நிரப்ப அனுமதித்தது.

இந்த நடவடிக்கையால், அந்த ஆண்டின் தொடக்கத்தில், சிறிமாவோ அரசாங்கத்திற்கு எதிரான ஒரு இடது தீவிரவாத எழுச்சியைக் கட்டுப்படுத்த தனது விமானத்தை அனுப்பிய இந்தியா தனக்கு ரோகம் இழைக்கப்பட்டதாக கருதியது.

பாகிஸ்தான் - இலங்கை இராணுவ உறவுகள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நீண்டகால போரில் ஒரு முக்கியமான காரணியாக அமைந்தது. 2000 ஆம் ஆண்டில், வடக்கில் இலங்கை இராணுவ நிலைகளை நோக்கி "ஆபரேஷன் சீஸ்லெஸ் வெவ்ஸ்" என்ற பெயரில் தமிழீழ விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்திற்குள் நுழைந்து அரசாங்க துருப்புக்களை சுற்றி வளைத்தபோது இலங்கை அரசுக்கு "Multi-Barrel Rocket" ஆயுதங்கள் தேவைப்பட்டது.

அவ்வேளையில், பாகிஸ்தான் அவ்வாயுதங்களை விமானம் மூலம் கொண்டுவந்து இலங்கை அரசுக்கு வழங்கியது. 2006 இல் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் பஷீர் வாலி முகமதுவை படுகொலை செய்ய புலிகள் முயன்றமை குறிப்பிடத்தக்கது.

2009 ஏப்ரல் மாதத்தில், இலங்கை 25 மில்லியன் மதிப்புள்ள 81 மிமீ, 120 மிமீ மற்றும் 130 மிமீ மோட்டார் வெடிமருந்துகளை ஒரு மாதத்திற்குள் வழங்குமாறு பாகிஸ்தானிடம் வேண்டிக்கொண்டது.
2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி இலங்கைக்கு மேற்கொண்ட அரச விஜயத்தின்போது,
பாகிஸ்தான் அல்-காலித் பிரதான போர் டாங்கிகள், இலகுரக ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மற்றும் சீன-பாகிஸ்தான் கூட்டு முயற்சியான ஜே. எஃப் -17 தண்டர் போர் விமானங்களை கொள்வனவு செய்வதில் இலங்கை ஆர்வம் காட்டியது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இலங்கையின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷாவை தேர்தல் வெற்றியை ஒட்டி வாழ்த்துத் தெரிவித்தார். மேலும், அவரை பாகிஸ்தானுக்கு விஜயம் தருமாறும் அழைப்பு விடுத்தார். அவ்வழைப்பை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷாவும் ஏற்றுக்கொண்டார்.

ஐக்கிய தேசியக் கட்சி (யு.என்.பி) மற்றும் இலங்கை சுதந்திரக் கட்சி (எஸ்.எல்.எஃப்.பி) ஆட்சிகளின் போதும், இலங்கை பாகிஸ்தானுடன் நட்புறவைக் பேணி வந்தது. இதற்குக் காரணம், ஆட்சியில் இருந்த இலங்கை அரசாங்கங்கள் எதுவாக இருந்தபோதும், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே ஒரு அமைதியின்மையை உணர்ந்து வந்துள்ளன.
பாகிஸ்தான் இப்போது இலங்கை ஆயுதப்படை வீரர்களுக்கு பயிற்சியளிப்பதில் ஈடுபட்டுவருகிறது. மேலும், சர்வதேச மன்றங்களில் இலங்கையை தொடர்ந்து ஆதரிக்கிறது.
ஆனால், பாகிஸ்தான்-இலங்கை உறவுகள் பொருளாதார ரீதியில் இன்னும் போதியளவு வளர்ச்சி அடையவில்லை. பாகிஸ்தானுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முதல் நாடு இலங்கையாகும். இது 2005 ஜூன் 12 முதல் செயற்பாட்டுக்கு வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கைக்கான பாகிஸ்தானின் ஏற்றுமதி 2004 ஆம் ஆண்டில், 97 மில்லியன் அமெரிக்க டொலர்களிலிருந்து 2018 ஆம் ஆண்டில் 355 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.
அதே நேரத்தில் இலங்கையின் பாகிஸ்தானுக்கான ஏற்றுமதி 2004 ஆம் ஆண்டில் 47 மில்லியன் அமெரிக்க டொலர்களிலிருந்து 2018 ஆம் ஆண்டில் 105 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. இது கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகரிப்பாகும்.
இருப்பினும், தற்போதைய இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தகம் 460 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மாத்திரமே. ஆனால், இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தத்தின் சாத்தியப்பாடு 2 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமாகும்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் இம்ரான் கான் இருவரும் அன்னிய நேரடி முதலீட்டை ஊக்குவிப்பதாக உறுதியளித்துள்ளதால், முதலீட்டின் பல்வேறு துறைகள் சம்பந்தமாகவும் இம்ரான் கானின் விஜயத்தின் போதும் கலந்துரையாடப்படும்.
போதியளவு விழிப்புணர்வு இல்லாமையால், ஏற்றுமதியாளர்கள் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் உள்ள சந்தை ஆற்றலையும் நன்மைகளையும் முழுமையாகப் பயன்படுத்துவதில்லை.
மேலும், இலங்கை வர்த்தகர்கள் ஏற்கனவே உள்ள சந்தை வாய்ப்புக்களை மாத்திரமே நாடுகிறார்கள். இரு நாடுகளும் தங்கள் தயாரிப்புகளை சந்தையின் கோரிக்கைகளுக்கு ஏற்ப ஆராய்ச்சி, புதுமை மற்றும் மதிப்பு கூட்டல் மூலம் பன்முகப்படுத்த வேண்டும்.
பாகிஸ்தானிய நிறுவனங்கள் இலங்கையில் விவசாயம், தகவல் தொழில்நுட்பம், தங்க நகைகள் மற்றும் கட்டுமான / ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளில் முதலீடு செய்துள்ளன என்று பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் தனது சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார்.
இலங்கை கட்டுமான மற்றும் ரியல் எஸ்டேட் துறை வேகமாக வளர்ந்து வருகிறது. மேலும், பல்வேறு நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் 600 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சிமென்ட் இறக்குமதி தேவைப்படுகிறது.

பாகிஸ்தான் ஏற்கனவே இலங்கைக்கு சிமென்ட்டை ஏற்றுமதி செய்கிறது. மேலும், போட்டி, விலை மற்றும் நல்ல தரம் காரணமாக அதன் ஏற்றுமதியை அதிகரிக்கும் திறனையும் அது கொண்டுள்ளது. கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் மீதான நுகர்வோர் செலவினங்கள் அதிகரித்ததன் காரணமாக இந்தத் துறைக்கு ஒரு பாரிய சாத்தியப்பாடு காணப்படுகிறது.
இலங்கை தனது வருடாந்த சீனி தேவையில் 90% க்கும் அதிகமாக பகுதியை இறக்குமதி செய்யகின்றது. 2021 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் முதலீட்டாளர்கள் கவனம் செலுத்தக்கூடிய சாத்தியமான துறைகளில் “சீனி” ஏற்றுமதியும் ஒன்றாகும்.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் சீர்குலைந்துள்ளதால், இந்தியாவில் இருந்து வெற்றிலை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதில்லை. இதனால், இலங்கை வெற்றிலைகள் பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி வாய்ப்பை பெற்றுள்ளன.

கடந்த ஆண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பதவியேற்ற பின்னர் இலங்கைக்கு வருகை தரும் முதல் அரசாங்கத் தலைவர் பிரதமர் இம்ரான் கான் ஆவார்.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் மூலோபாய முக்கியத்துவத்தை பெற்றுள்ள இலங்கையுடனான தங்கள் உறவை வலுப்படுத்த இந்தியா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வரும் சூழலில் இம்ரான் கானின் இவ்விஜயமானது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.