கடந்த ஆண்டு சமாதான பேச்சுவார்த்தைகள் தொடங்கிய பின்னர் ஆப்கானிஸ்தானில் பொதுமக்கள் உயிரிழப்புக்கள் கடுமையாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை செவ்வாயன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

யு.எஸ்-தரகு சமாதான பேச்சுவார்த்தைகள் செப்டம்பரில் தொடங்கியது, ஆனால் அதன் பின்னர் போர் நிறுத்தம் தொடர்பான முன்னேற்றம் குறைந்து. 

முதலில் திட்டமிட்டபடி சர்வதேச சக்திகள் மே மாதத்திற்குள் படையினரை வெளியேற்றுமா என்பது குறித்த நிச்சயமற்ற நிலையில் வன்முறை அதிகரித்துள்ளதாகவும் ஐ.நா. தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் செயல்பட்டுவரும் ஐ.நா. வின் உதவி அமைப்பான 'யுனாமா' (UNAMA) வின் வருடாந்திர அறிக்கையின்படி 2020 ஆம் ஆண்டில் பொதுமக்கள் உயிரிழப்பு 8,820 ஆக இருந்தது. 

இது முந்தைய ஆண்டை (2019) விட 15 சதவீதம் குறைவாக இருந்தது. 

ஆனால் 2020 ஆம் ஆண்டின் இறுதி மூன்று மாதங்களில், சமாதானப் பேச்சுவார்த்தைகள் தொடங்கியபோது உயிரிழப்பு எண்ணிக்கைகள் சடுதியாக அதிகரித்துள்ளன.

கடந்த ஆண்டு “ஆப்கானிஸ்தானில் அமைதி ஆண்டாக இருந்திருக்கலாம். அதற்கு பதிலாக, ஆயிரக்கணக்கான ஆப்கானிய பொதுமக்கள் அழிந்தனர், ”என்று யுனாமாவின் தலைவர் டெபோரா லியோன்ஸ் தெரிவித்துள்ளதுடன், யுத்த நிறுத்தத்திற்கான அழைப்புகளை மீண்டும் வலியுறுத்தினார்.

பதிவுகள் தொடங்கிய பின்னர் முதல்முறையாக, முந்தைய மூன்று மாதங்களில் இருந்து ஆண்டின் இறுதி மூன்று மாதங்களில் இறப்புகள் மற்றும் காயங்கள் அதிகரித்துள்ளன என்று அறிக்கை கூறியுள்ளது. 

2019 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது நான்காவது காலாண்டில் உயிரிழப்புகள் 45 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

எனினும் ஐ.நா.வின் இந்த அறிக்கையை தலிபான்கள் விமர்சித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.