ரொபட் அன்டனி  

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமாகிய நிலையில் இன்று இரவு 8.30 மணிக்கு இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன உரையாற்றவுள்ளார். 

கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் இருந்தவாறு இணைய வழியில் ஜெனிவா பேரவையில் உரையாற்றவுள்ள வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இதன்போது அண்மையில் ஆணையாளர் மிச்சல் பச்லெட்  வெளியிட்ட அறிக்கையை முற்றாக நிராகரிப்பதாக அறிவிக்கவுள்ளார்.

அத்துடன் அமைச்சருடன் இந்த உரையின்போது, தூதுக்குழுவாக அமைச்சர்களான ஜி .எல். பீரிஸ், காமினி லொக்குகே, உதய கம்மன்பில, சரத் வீரசேகர ஆகியோர் இடம்பெறவுள்ளனர்.  அதுமட்டுமன்றி வெளிவிவகார அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் இந்த  குழுவில் இடம்பெறுவர்.

அவ்வாறு தூதுக்குழுவின் சார்பாகவே இலங்கையை  பிரதிநித்துவபடுத்தி அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்றைய தினம் ஜெனிவா மனித உரிமைப் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடரின் ஆரம்ப அமர்வில் உரையாற்ற இருக்கின்றார்.

இதன்போது இலங்கை கடந்த காலங்களில் முன்னெடுத்த செயற்பாடுகள், தற்போது முன்னெடுத்து கொண்டிருக்கும் செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்க உள்ள செயற்பாடுகள்  என்பன தொடர்பாக விரிவான விளக்கம் ஒன்றை வெளிவிவகார அமைச்சர் வெளியிடவிருக்கின்றார்.

அது மட்டுமன்றி அண்மையில்  ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட மூவர் கொண்ட ஆணைக்குழு எவ்வாறு  பொறுப்புக்கூறல் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் ஆராயும் என்பது தொடர்பாகவும் வெளிவிவகார அமைச்சர் விளக்கம் அளிக்க உள்ளார்.

 குறிப்பாக கடந்த கால ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் பரிந்துரைகளை இந்த ஆணைக்குழு ஆராயும் என்றும் அவர் குறிப்பிடவுள்ளதுடன், கடந்த 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஜெனிவா மனித உரிமை பேரவையில் வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாகவே இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது என்றும் வெளிவிவகார அமைச்சர் இதன்போது குறிப்பிடவுள்ளார்.