(இராஜதுரை ஹஷான்)

நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியல் பழிவாங்களுக்குட்பட்டவர்களுக்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை  ஊடாக நியாயம் வழங்கப்படும். அறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு எதிர் தரப்பினரை நெருக்கடிக்குள்ளாக்குவது அரசாங்கத்தின் நோக்கமல்ல. நல்லாட்சியின் தவறை ஜனாதிபதி தொடரமாட்டார் என சமுர்த்தி, மனைப்பொருளாதார,  நுண்நிதி, சுயதொழில் மற்றும் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை, ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை அறிக்கை  மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் ஆகிய விடயங்கள் தற்போதைய அரசியல் களத்தின் பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது.

அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் எதிர்தரப்பினர் சமூக மட்டத்தில்  தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்துள்ளார்கள். நல்லாட்சி அரசாங்கத்தில் அதிகாரத்தில் இருந்த அரசியல்வாதிகள் அரச அதிகாரிகளை தங்களின் அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டார்கள் என்றார்.