(சஜிஷ்ணவன் சிவச்சந்திரதேவன்) 

இலங்கை என்கிற சிறு தீவு உலகம் முழுவதும் பேசப்பட இரண்டு காரணங்கள் அடித்தளமாய் அமைந்தன. ஒன்று முப்பதாண்டு காலமாக நாட்டுக்குள்ளேயே இடம்பெற்ற யுத்தம். மற்றையது அந்த யுத்தத்தின் பாதிப்புக்களால் அவுஸ்திரேலியாவும் மேற்கிந்திய தீவுகளும் இலங்கையில் விளையாட மறுப்பு தெரிவிக்க அதிர்ஷ்டமும் திறமையும் ஒன்றாய் கைகூட தன்னுடைய முதல் உலகக்கிண்ணத்தை வென்று "நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்க வந்தவர்களல்ல. வேட்டையாடிச் செல்ல வந்த சிங்கங்கள்" என்று உலகுக்கு பறை சாற்றி யாராலும் அசைக்கவியலாத அவுஸ்திரேலியாவை இறுதிப்போட்டியில் மண் கவ்வ வைத்து உலகை திரும்பி பார்க்க வைத்தனர். அங்கே ஆரம்பமாகியது இலங்கை கிரிக்கட் அணியின் இரண்டாம் அத்தியாயம்.


2007 உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் சீரற்ற வெளிச்சத்தில் விளையாடி தோற்றுப்போன இலங்கை, 2009 டி - 20 உலகக்கிண்ணம், 2011 உலகக்கிண்ணம், 2012 டி- 20 உலகக்கிண்ணம் என்று அடுத்தடுத்து இறுதிப்போட்டிகளில் தோல்விகளையே சந்தித்திருந்தாலும் 2014 இருபதுக்கு இருபது உலகக்கிண்ணத்தை வென்று எங்கள் தரம் இன்னும் உச்சத்திலேயே தான் இருக்கிறது என்பதை நிரூபித்திருந்தது.


இவற்றுக்கெல்லாம் காரணம் இல்லாமலில்லை. 1996 உலகக்கிண்ணம் வென்ற அனுபவ வீரர்களான சமிந்த வாஸ், முத்தையா முரளிதரன், கனவான் தன்மையின் மறு உருவமாய் குமார் சங்கக்கார, தலைமைத்துவத்தின் இலக்கணமாய் மஹேல ஜயவர்தன, சுழலுக்கு ஹேரத், வேகத்திற்கு மாலிங்க, ஸ்விங்கிற்கு குலசேகர, களத்தடுப்பிலும் சகலதுறையிலும் டில்ஷான் என்று உலக கிரிக்கெட் பார்த்து வியந்த வீரர்கள் குவிந்திருந்த அணியாக திகழ்ந்தது இலங்கை.


இத்தனை பெரும் 2015 உலகக்கிண்ணத்துடன் ஓய்வு பெற ஆரம்பமாகிறது அத்தியாயம் மூன்று. உலகம் வியந்த அணிகளாய் திகழ்ந்த மேற்கிந்திய தீவுகள், ஸிம்பாவே, தென்னாபிரிக்கா போன்றவை முகாமைத்துவத்தின் சுயநலப்போக்காலும் திறனற்ற முகாமைத்துவதாலும் விளையாட்டுக்குள் புகுத்தப்பட்ட அரசியலால் திறமைக்கு வழங்க மறுக்கப்பட்ட அங்கீகாரத்தாலும் ஏற்ற சம்பளத்தை வழங்காமல் செய்யப்பட்ட ஊழல்களாலும் கடைநிலைக்கு தள்ளப்பட்டது போல இலங்கையும் மாறியிருக்கிறது. நிர்வாகத்துக்கும் அணிக்கும் சரியான தலைமையைத் தேடுவதையே தனி வேலையாய் செய்துகொண்டிருந்தது இலங்கை கிரிக்கெட் சபை.


மூன்று இலட்சம் வீரர்கள் பாடசாலைகளில் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தும் கூட சரியான பதினொருவரை தேர்ந்தெடுக்க தெரிவுக்குழுவுக்கு தரமான வீரர்களை கண்டெடுக்க முடியாமலுள்ளது. வடக்கு கிழக்கில் சரியான வளங்கள் இல்லையென்பதை குறையாக கூறித்திரியும் மக்களுக்கு கொழும்பு, கண்டி, காலியைத்தாண்டி சரியான கிரிக்கெட் பயிற்சி பெறும் வளமுள்ள பாடசாலைகளையோ விரல் விட்டு எண்ணிவிட முடியும் என்கிற கசப்பான உண்மையை விளையாட்டுக்குள் இனவாதத்தை புகுத்தும் கனவான்கள் அறியவில்லைப்போலும்.


இத்தனை பிரச்சினைகள் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆவதும் மறுநாள் மறைந்து போவதுமாய் இருக்க இப்போது இன்னுமோர் நாடகம் உலக கிரிக்கெட் ரசிகர்களையும் விமர்சகர்களும் இந்த அழகான நாட்டின் பக்கம் அழைத்து வந்திருக்கிறது.


சமிந்த வாஸ். 111 டெஸ்ட் போட்டிகளில் 355 விக்கெட்களையும் 322 ஒருநாள் போட்டிகளில் 400 விக்கட்களையும் வீழ்த்திய உலகின் தலை சிறந்த பந்து வீச்சாளராக அங்கீகரிக்கப்பட்ட வீரர். உலகக்கிண்ண வெற்றியாளர்களுள் ஒருவர். இலங்கையின் தற்போதைய வீரர்கள் தகுதி பெற தவறிய 2 கிலோ மீட்டர் ஓட்ட சோதனையை 7 நிமிடங்கள் 30 செக்கன்களில் ஓடி முடித்த 47 வயதான முன்னாள் கிரிக்கெட் வீரர்.


டேவிட் சேகர், சர்வதேச போட்டிகளில் ஒன்றிலேனும் விளையாடிய அனுபவமில்லாத அவுஸ்திரேலிய வீரர். 72 முதற்தர போட்டிகளில் 247 விக்கட்களையும் 43 லிஸ்ட் ஏ போட்டிகளில் 46 விக்கட்களையும் வீழ்த்திய ஒரு வேகப்பந்துவீச்சாளர்.


இப்போது பிரச்சினை எங்கே ஆரம்பிக்கிறது என்றால் தன்னுடைய தனிப்பட்ட காரணங்களுக்காக இலங்கையின் வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து சமிந்த வாஸ் விலகிக்கொண்டார், இதற்கான சரியான காரணம் இலங்கை கிரிக்கெட் சபை சார்பிலோ எதுவித காரணங்களும் வெளியிடப்படாத நிலையில் இலங்கையின் மேற்கிந்திய தீவுகளுக்கெதிரான தொடரினைக் கருத்திற்கொண்டு வேகப்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் சபை அறிவித்திருந்தது.


இந்நிலையில் இவருக்கான நியமனக்கடிதம் வழங்கப்பட்டு 11 ஆவது மணித்தியாலத்தில் மார்ச் 26ஆம் திகதியிலிருந்து அமுலாகும் வகையில் தன்னுடைய பதவி  விலகலை அறிவித்துள்ளார் சமிந்த வாஸ்.


இதற்கான காரணமாக தான் இலங்கை கிரிக்கெட் சபையிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்ததாகவும் அதனை உடனடியாக கிரிக்கெட் சபை நிராகரித்ததன் காரணமாக தான் அந்த பதவியில் இருந்து விலகுவதாகவும் நீதி நிச்சயமாக நிலைத்து நிற்கும் என்றும் தன்னுடைய டடுவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.


இது தொடர்பான உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையை வெளியிட்ட ஸ்ரீ லங்கா கிரிக்கெட், சமிந்த வாஸ் போன்ற ஒரு சிறந்த வீரர் தன்னுடைய சுய லாபங்களுக்காகவும் அதிக பணம் உழைக்கும் நோக்கத்திலும் இந்த பதவியை இராஜினாமா செய்வது மிகுந்த கவலையளிக்கிறது. உலகமே மிகுந்த நிதி நெருக்கடியில் உள்ள இந்த வேளையில் நாட்டின் விளையாட்டுத்துறைக்கு ஒரு முன்னாள் வீரராக சேவை செய்யாமல் பதவி விலகியமை வருத்தமளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.


இந்தப்பிரச்சினை குறித்து இன்று பாராளுமன்றில் கேள்வியெழுப்பிய எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் "ஸ்ரீ லங்கா கிரிக்கெட் சபை பணக்கஷ்டத்தில் உள்ள நிலையில் சம்பளத்தை அதிகமாக கோரிய சமிந்த வாஸ் மீது அதிருப்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் ஊடகங்களிலும் மிகப்பெரும் பேசுபொருளாகியிருந்தது.

ஆனால் எங்களுக்கு தெரிந்த வரையில் கிரிக்கெட் சபையின் பிரதான செயற்பாட்டு அதிகாரிக்கு மாதாந்த சம்பள உயர்வாக 10-15 இலட்சங்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. பிரதான நிறைவேற்று அதிகாரிக்கு 6 இலட்சம் ரூபாய் சம்பள அதிகரிப்பு அறிவிக்கப்பட்டது.

ஆனால் சமிந்த வாஸ் போன்ற திறமையான வீரர், திறமையான பயிற்றுவிப்பாளர் 3500 அமெரிக்க டொலர்களை அதிகமாக கேட்டதாக குற்றம் சாட்டப்பட்டு அப்படிப்பட்ட வீரருக்கு மிகப்பெரிய இழுக்கினை ஏற்படுத்தியுள்ளது கிரிக்கெட் சபை. கிரிக்கெட் சபையின் நிர்வாகிகளுக்கு இவ்வளவு இலட்சங்கள் சம்பள உயர்வு கொடுக்கப்படும் போது இலங்கையின் பெயரை கிரிக்கெட் மூலமாக உலகத்திற்கு எடுத்துச்சென்ற சமிந்த வாஸ் போன்ற ஒரு திறமையான வீரருக்கு 3500 அமெரிக்க டொலர்களை கொடுப்பதில் கிரிக்கெட் சபைக்கு அப்படியென்ன பொருளாதார பிரச்சினை உள்ளது என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்" என்றார்.


மேலும் இலங்கை கிரிக்கெட்டினை அபிவிருத்தி செய்வதற்காகவும் விளையாட்டுக்களை மேம்படுத்தவும் பல திட்டங்களை முன்னெடுத்துவரும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று பாராளுமன்றில் இது குறித்து விளக்கமளிக்கையில் "சமிந்த வாஸின் செயற்பாடுகள் குறித்து தனிப்பட்ட ரீதியில் நான் கவலையடைகின்றேன். அவர் மிகச்சிறந்த வீரர், அதேபோல் சிறந்த பயிற்றுவிப்பாளர்.

அவ்வாறான ஒருவர் தேசிய அணிக்கு கிடைக்காமல் போனமைக்காக நான் வருத்தப்படுகின்றேன். மறுபக்கம் அவர் வீரராக இருக்க முடியும் அல்லது பயிற்றுவிப்பாளராக இருக்க முடியும் ஆனால் அவரது ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஒரு முறைமை உள்ளது.

பயிற்றுவிப்பாளராக அவருக்கென்ற சம்பளம் குறித்து இலங்கை கிரிக்கெட் சபையுடன் ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சுற்றுப்பயணம் ஒன்று செல்லும் வேளையில் ஒப்பந்தத்திற்கு மேலதிகமான கொடுப்பனவுகளும் வழங்கப்படும். இவை உள்ளடக்கிய ஒப்பந்தமொன்றை அவர் செய்திருந்த போதிலும் இறுதி நேரத்தில் அவருக்கான கொடுப்பனவுகளை அதிகரித்து தரக்கோரியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் சபையுடன் இணக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு ஒரு சுற்றுப்பயணம் செல்லும் வேளையில் ஒப்பந்தத்திற்கு அப்பால் சுற்றுப்பயண கொடுப்பனவுகளும் வழங்கப்படும். அதற்கும் மேலதிகமாக இந்த சுற்றுப்பயணத்திற்காக மாத்திரம்  ஏழரை இலட்சம் ரூபா அவருக்கு வழங்க ஏற்கனவே இணக்கம் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதனை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை மாறாக இராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். கிரிக்கெட் நிர்வாக சபையும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளது.

அவரது தீர்மானம் குறித்து நான் எதனையும் கூற முடியாது, ஆனால் தேசிய அணி தனது சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்க நான்கு மணி நேரத்திற்கு முன்னர் அவர் இராஜினாமா செய்தமை குறித்து நான் அதிருப்தியடைகிறேன். இளம் அணியொன்று தெரிவு செய்யப்பட்டு, அதற்கு பொறுப்பாக சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டும், அவருக்கு நீண்டகால வாய்ப்புகளை  உருவாக்கிக்கொடுத்ததும் அதனை வாஸ் நிராகரித்தமை அதிருப்தியடையும் செயற்பாடு என்றே நான் கருதுகிறேன்.


அவருக்கான கொடுப்பனவுகள் குறித்து எந்தவித பிரச்சினையும் இல்லை, ஆனால் அதனை கேட்பதற்கு ஒரு வழிமுறை உள்ளது, இறுதி நேரத்தில் அவர் தனக்கான கோரிக்கையை முன்வைப்பதற்கு நாம் தலை சாய்த்தால் நாளை இதுவே வேறொரு விளையாட்டு வீரரோ, பயிற்றுவிப்பாளரோ அதே வேலையை செய்தால் இறுதியாக அணியே நெருக்கடியில் விழும். அதுமட்டும் அல்லாது நாம் வழங்கும் கொடுப்பனவுக்கு மேலதிகமாக ஒரு நாளைக்கு 200 டொலர்கள் கேட்டுள்ளார் எனவும் அறிந்துகொள்ள முடிகின்றது." என்று தெரிவித்தார்.


வாஸினுடைய இராஜினாமா குறித்து ஆங்கில செய்தி இணையத்தளமொன்றுக்கு கருத்து தெரிவித்த பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஒருவர் "இலங்கை கிரிக்கட் சபை வெளிநாட்டு பயிற்றுவிப்பாளர்களை அணுகும் முறைக்கும் இலங்கையின் முன்னாள் வீரர்களை நடத்தும் முறைக்கும் பல வேறுபாடுகள் உள்ளன.

வெளிநாட்டிலிருந்து வரும் அனுபவமற்ற பயிற்றுவிப்பாளர்களுக்கு வழங்கும் சம்பளத்தோடு ஒப்பிடுகையில் இலங்கையின் பயிற்றுவிப்பாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மிகக்குறைவே. ஆகையால் சமிந்த வாஸ் போன்ற தகுதியான வீரரொருவர் இதனால் அதிருப்தியடைந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை" என்று தெரிவித்திருந்தார்.


இப்படியான சூழ்நிலையில் இன்று அதிகாலை மேற்கிந்திய தீவுகளுக்கு புறப்பட்ட இலங்கை அணி வேகப்பந்துவீச்சுக்கு பயிற்றுவிப்பாளர் இல்லாமலேயே சென்றிருப்பது இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்துக்குள் இடம்பெறும் குளறுபடிகளால் அணியின் பெறுபேறுகளில் பாதிப்பு ஏற்படுவதை மிக வெளிப்படையாக அறிய முடிகிறது. இந்நிலை தொடருமேயானால் யார் தலைமையில் எத்தனை குழுக்கள் வந்தாலும் பிரச்சினைகள் தீரப்போவதில்லை என்பது திண்ணம்.

இந்நிலையில் இலங்கையின் டி 20 அணியின் தலைவராக பெயரிடப்பட்டிருந்த தசுன் ஷானகவின் கடவுச்சீட்டு திருடப்பட்டு விட்டதாகவும் இதன் காரணமாக அவர் அணியுடன் மேற்கிந்திய தீவுகளுக்கு பயணிக்கவில்லையென்றும் கிரிக்கட் சபை தற்போது வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.