எம்.காசிநாதன்

“இலங்கையின் வடகிழக்கில் இடம் பெயர்ந்த தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுப்பது” உள்ளிட்ட இந்தியாவின் நலத்திட்டங்கள் குறித்தும், “யாழ்ப்பாணம் பகுதிக்கு சென்ற ஒரே இந்தியப் பிரதமர் தான்” என்றும் தமிழகத்திற்கு புதிய திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காக வருகைத்தந்திருந்த மோடி பேசியிருப்பது சாதாரணமான மேடைப் பேச்சு மட்டும் அல்ல. அதுவொரு அரசியல். தேர்தல் அரசியல் வியூகம்.

இலங்கைத் தமிழர்களுக்கான அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட பிரச்சினைகளும், தமிழக தேர்தல்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்தே பயணித்துக் கொண்டிருக்கின்றன. இலங்கையில் போர் நிறைவுக்கு வந்தததன் பின்னரும்கூட தமிழ்நாட்டில் நடைபெற்ற பாராளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் அரசியல் கட்சிகளின் பிரசாரங்களிலும் தேர்தல் அறிக்கைகளிலும் இப்பிரச்சினை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.

தி.மு.க.விற்கும், அ.தி.மு.க.விற்கும் இடையில் இலங்கை தமிழர் பிரச்சினையில் “யார் சாதித்தது- யார் சோதித்தது” என்று காரசாரமான பட்டிமன்றம் போல் வார்த்தைப் போர் நடப்பதை பிரசாரங்களில் காண முடியும். “கருணாநிதி, எம்.ஜி.ஆர்” காலமாக இருந்தாலும், “கருணாநிதி, ஜெயலலிதா” காலமாக இருந்தாலும் இதில் மாற்றம் ஏற்பட்டதில்லை.

இந்நிலையில், இப்போது அ.தி.மு.க.விற்கு 'பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி',  'தி.மு.க.விற்கு ஸ்டாலின்' என்ற நிலையில் இலங்கை தொடர்பான விடயம் நடைப்பெறவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தலிலும் தலைதூக்க வாய்ப்பு இருக்கிறது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இருப்பது அதற்கு மிக முக்கியக் காரணமாகும். 

தமிழக மீனவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகின்றமை, இலங்கைப்படைகளால் படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றமை போன்றவை தொடர்ந்து தமிழக அரசியல்வாதிகளுக்கு நீடிக்கும் பிரச்சினையாகவே இருக்கின்றது.

அதனால் ஒவ்வொரு முறையும் பாராளுமன்றத்தில் இது குறித்து எம்.பி.க்கள் குரல் எழுப்புவதும்- அதற்கு “நாங்கள் இலங்கை அரசுடன் பேசி வருகிறோம், பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்” என்று மத்திய அரசு அறிவிப்பதும் தொடருகிறது.

மத்தியில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசு இருந்தபோதும்,  இப்போது பா.ஜ.க. தலைமையிலான அரசு இருக்கின்றபோதும் நிலைமை ஏறக்குறைய ஒரே மாதிரியாகத்தான் உள்ளது. ஆனாலும், இந்த முறை தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்குகிற நேரத்தில்தான் இலங்கை விவகாரங்கள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலும் வலுவாக ஆரம்பித்திருக்கின்றன. 

ஆகவே, அதை மையமாக வைத்து மத்திய அரசுக்கான அழுதத்தினை தமிழகத்திலிருந்து அதிகரிப்பதற்கு வாய்ப்புக்கள் அதிகமாகியுள்ளன.

ஏற்கனவே, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு இது குறித்து கடிதம் எழுதியிருக்கிறார். அதில் தி.மு.க. எம்.பி.க்கள் அனைவரும் கையொப்பம் இட்டுள்ளனர்.

இந்த கடிதத்திற்கு முன்பாகவே பிரதமரைச் சந்தித்த முதலமைச்சர் பழனிச்சாமி, “இலங்கையில் சிறையில் வாடும் தமிழக மீனவர்களையும் மீட்க வேண்டும். படகுகளை திரும்பப் பெற வேண்டும்” என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து, பிரதமரிடம் கடிதத்தை நேரில் கொடுத்து விட்டுத் திரும்பினார்.

இந்த சூழலில்தான் சென்னை வந்த பிரதமர் இலங்கை தமிழர்கள், தமிழக மீனவர்கள் நலன் குறித்து விரிவாகவே பேசியிருக்கிறார். பிரதமருக்கு முன்பே தமிழக ஆளுநர் இந்த வியூகத்தின் பாதையை காட்டிவிட்டார் என்றே கூறவேண்டும். “யானை வரும் பின்னே- மணியோசை வரும் முன்னே” என்பது போல் பிரதமரின் இந்த பேச்சுக்கு முன்பே தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் “முன்னுதாரணமில்லாத” ஒரு பத்திரிகைக் குறிப்பை ராஜ்பவனில் இருந்து வெளியிட்டார்.

இது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் இலங்கை பயணத்தை மையமாக வைத்து வெளியிடப்பட்டது. 

வெளியுறவுத்துறை அமைச்சரின் பயணத்தில் நடைபெற்றது குறித்து தமிழக ஆளுநர் வெளியிட்ட இந்த அறிக்கை, தமிழக மக்களிடையே மட்டுமல்ல, அரசியல் கட்சிகளிடமும் விநோதமாக தெரிந்தாலும், அதில் ஏதோ விடயம் இருக்கிறது என்பது அப்போதே உணரப்பட்டது.

இலங்கைத் தமிழர் பிரச்சினையைப் பொறுத்தமட்டில், தமிழகத்தில் காங்கிரஸின் மீதுதான் கோபம் இருந்தது. அந்த கோபம் 2009 பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளில் பிரதிபலிக்கவில்லை என்றாலும்- 2011 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் எதிரொலித்தது என்றே சொல்லவேண்டும்.  தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியின் தோல்விக்கு அதுவுமொரு காரணம். 

இது 2021 சட்டமன்ற தேர்தல் என்றாலும், பத்து வருடங்களுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி மிக இக்கட்டான காலகட்டத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறது.  ஆட்சியிலிருந்த மாநிலங்களை இழந்து கொண்டிருக்கிறது. 

தமிழகத்திற்கு அண்டை மாநிலமான புதுச்சேரியில் அக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பம், புதுவை முதலமைச்சராக இருக்கும் நாராயணசாமி இன்னும் எவ்வளவு நாளைக்கு பதவியில் நீடிக்க முடியும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

காங்கிரஸ் பலவீனமடைந்து வருகிறது எனத் தெரிந்து புதுச்சேரியில் தனித்துப் போட்டியிடுவோம் என்று ஒரு கச்சேரியை தி.மு.க. துவங்கியது. அத்துடன் இந்த நகர்வு காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுவை, தமிழகம் ஆகிய இரு மாநிலங்களிலும், இரு கட்சிகளுக்குள்ளும் நடக்கும் இந்தப் பனிப்போரின் பின்னணியில் ஐ.நா. மன்றத்தின் மனித உரிமை பேரவையின் இம்முறையான அமர்வு இரு தரப்பினருக்கும் தலைவலியாகவே இருக்கப்போகின்றது.

அதே நேரத்தில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்திருக்கும் பா.ஜ.க.விற்கு  ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் வரும் இலங்கை விவகாரம் தர்மசங்கடத்தை ஏற்படுத்தப்போகின்றது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வு பரபரப்பாகும் நேரத்தில் தமிழகத்திலிருந்து பா.ஜ.க.விற்கான அழுத்தம் அதிகரித்து இருக்கும். அதனால் அக்கட்சியின் உள்ள கூட்டணிக்கு தலைமையேற்கும் அ.தி.மு.க.விற்கும் மேலும் நெருக்கடியைக் ஏற்படுத்தவுள்ளது.

இதே போன்றதொரு சூழலில் மத்தியில் காங்கிரஸ் கட்சியும், மாநிலத்தில் தி.மு.க.வும் இருந்த காலத்தில் இலங்கையில் நடைபெற்ற போர் தான் தமிழகத்தில் இரு கட்சிகளுக்குமே பெரும் பிரச்சினையாக மாறின.

அதேபோன்றதொரு நிலைமை இப்போது மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் அ.தி.மு.க.விற்கும், மத்தியில் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க.வுக்கும் ஏற்பட்டுள்ளது. 

இந்த முறை மத்தியில் பா.ஜ.க. தமிழக எம்.பி.க்களின் ஆதரவில் ஆட்சியில் இல்லை என்பது மட்டுமே சாதகமான அம்சம். ஆனாலும், தேர்தலில் இது ஒரு முதன்மைப் பிரசாரமாகி விட வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன.

அப்படியொரு சூழல் எழும்போது “காங்கிரஸ் கட்சிதான் இலங்கை தமிழர்களின் நலனை கோட்டை விட்ட கட்சி”, “அக்கட்சியுடன் அப்போது தி.மு.க.வும்தான் கூட்டணி வைத்திருந்தது” என்பதை முன்னிலைப்படுத்துவதற்கு ஒரு களமாக சென்னை விஜயத்தை பிரதமர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது. 

இப்பிரச்சினையில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இந்தியா எடுக்கும் எந்த முடிவும் தமிழகத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதில் அ.தி.மு.க. கவனமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

அக்கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கும் பா.ஜ.க.விற்கும் அது புரியாமல் இல்லை. ஆகவேதான்,  சென்னை வந்த பிரதமர் நரேந்திரமோடி இலங்கை தமிழர் விடயத்தினை கையில் எடுத்திருந்தார். இதனால் இந்த விவகாரம் தமிழக தேர்தல் களத்தில் தொடர்ந்தும் அனல் பறக்கும்.