பேஸ்புக் நிறுவனம் அவுஸ்திரேலிய செய்தி பக்கங்கள் மீது விதித்த சர்ச்சைக்குரிய தடையை விலக்கிக் கொள்ளப்போவதாக அறிவித்துள்ளது.

சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்திகளுக்கு பேஸ்புக் நிறுவனம் செய்தி நிறுவனங்களுக்கு பணம் செலுத்துவது சட்டபூர்வ கட்டாயம் என்ற அவுஸ்திரேலிய அரசின் விதிகளுக்கு பேஸ்புக் கடும் எதிர்ப்பு தெரிவித்து தடை நடவடிக்கைகளில் ஈடுபட்டது.

செய்தித் தளங்களுக்கு பிரவேசிப்பதனூடாக செய்திகளை வாசித்தல் மற்றும் செய்திகளைப் பகிர்வதற்கு கடந்த வியாழக்கிழமை முதல் அவுஸ்திரேலிய பயனாளர்களுக்கு பேஸ்புக் நிறுவனம் தடை விதித்தது.

இந்நிலையில், செவ்வாயன்று  பேஸ்புக் நிறுவனம் மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு இடையில் கலந்துரையாடல்கள் இடம் பெற்றது.

ஊடக விதிகளை திருத்தி அமைக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் ஒப்புக்கொண்டதை தொடர்ந்து பேஸ்புக் நிறுவனம், அவுஸ்திரேலிய செய்தி பக்கங்கள் மீது விதித்த சர்ச்சைக்குரிய தடையை விலக்கிக் கொள்ளப்போவதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் இருதரப்பும் பேசி சுமுகமான முடிவு எட்டப்பட்டுள்ளதால் , பொதுநலன் சார்ந்த ஊடக செய்திகள் இனி பேஸ்புக்கில் வெளியாகும் என அதன் அவுஸ்திரேலிய பிரிவு தெரிவித்துள்ளது.