( செ.தேன்மொழி )

நீர்கொழும்பு நகரசபை ஊடாக குறைந்த வருமானத்தை கொண்ட குடும்ங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவதற்கு வெளியிடப்பட்டிருந்த 298 அப்பியாசப் புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த போது கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இதுத் தொடர்பில் அவர்மேலும் கூறியதாவது ,

குறைந்த வருமானமுடைய குடும்பங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு இலவசமாக வழங்குவதற்காக நீர்கொழும்பு நகரசபை ஊடாக , நகரசபையின் பெயர் பதிக்கப்பட்ட அப்பியாசப் புத்தகங்கள் தயார் படுத்தப்பட்டிருந்தன.  

இந்த அப்பியாச புத்தகங்களில் ஒருத்தொகை நீர்கொழும்பு பகுதியில் அமைந்துள்ள புத்தக நிலையமொன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக  பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதுத்தொடர்பில் கவனம் செலுத்திய நீர்கொழும்பு பொலிஸார் , புத்தக நிலையத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 298 அப்பியாச புத்தகங்களை கைப்பற்றயுள்ளனர். இதனைத் தொடர்ந்து புத்தக நிலையத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் நகரசபை உறுப்பினர் மற்றும் ஆணையாளர் ஆகியோர் வாக்கு மூலம் வழங்கியுள்ளதுடன் , இந்த அப்பியாச புத்தகங்களை விற்பனை நிலையத்திற்கு வழங்கிய நபர்கள் தொடர்பிலும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.  சந்தேக நபர்களை கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.