(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதை அரசாங்கம் திட்டமிட்டு காலம் தாழ்த்துகின்றது. கத்தோலிக்க மக்களுக்கான நீதி நிலைநாட்டப்படாவிட்டால் எதிர்க்கட்சி கத்தோலிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற ரீதியில் வீதிக்கிறங்கி போராட நாம் தயாராக இருக்கின்றோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களின் வாக்குகளால் ஆட்சியை கைப்பற்றிய அரசாங்கம் , அதனுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்குவதை காலம் தாழ்த்திக் கொண்டிருக்கிறது. இது தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டுள்ள போதிலும் அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க தயக்கம் காட்டுகின்றனர். இந்த அறிக்கை மறைக்கப்படுவதற்கான காரணம் என்ன? ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு உறுப்பினர்களை விட தற்போது நியமிக்கப்பட்டுள்ள குழுவிற்கு என்ன ஆளுமை இருக்கிறது ?

குற்றவாளிகளுக்கு எதிராக தண்டனை வழங்க தன்னிடம் போதுமான ஆவணங்கள் இல்லை என்று சட்டமா அதிபர் கூறுகின்றார். அவ்வாறெனில் அவருக்கான உரிய ஆவணங்களை சேகரித்து கொடுப்பதற்கு தவறியுள்ளமையிலிருந்து கடந்த அரசாங்கத்தைப் போலவே தற்போதைய அரசாங்கத்திலுள்ள பாதுகாப்பு செயலாளரும் , பொலிஸ்மா அதிபரும் , புலனாய்வுதுறையினரும் தமது கடமைகளை செய்ய தவறியுள்ளனர்.

கொவிட் வைரஸ் விவகாரம் உள்ளிட்ட அரசாங்கத்தின் சகல நடவடிக்கைகளையும் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவையும் உள்நாட்டு அரசியலுக்காகப் பயன்படுத்திக் கொண்டு அரசியல் இலாபம் தேட முற்படுகின்றனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய்வதற்கு 6 பேர் கொண்ட குழுவிற்கு எவ்வித அதிகாரமும் கிடையாது. இந்த குழு சட்டத்திற்கு முரணானதாகும். எனவே அறிக்கை தற்போது காணப்படும் மொழியிலேயே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதியிடம் கோருகின்றோம். கத்தோலிக்க மக்களுக்கான நீதி நிலைநாட்டப்படாவிட்டால் எதிர்க்கட்சி கத்தோலிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற ரீதியில் வீதிக்கிறங்கி போராட நாம் தயாராக இருக்கின்றோம்.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டதன் பின்னரே சட்டமா அதிபரால் உரிய நடவடிக்கை எடுக்கக் கூடியதாக இருக்கும். ஆனால் அரசாங்கம் இதனை திட்டமிட்டு காலம் தாழ்த்துகிறது. எவ்வாறிருப்பினும் எமது கண்களில் குத்தி எம்மை ஏமாற்ற அரசாங்கம் முயற்சிக்குமானால் அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றார்.