(ஆர்.யசி)

ஈஸ்டர் தாக்குதல் குறித்த பரிந்துரைகளை ஆராய நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற குழுவின் அறிக்கை மார்ச் 15 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படுவதுடன், பாராளுமன்றத்திற்கும் அறிக்கையிடப்படும் என அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

பாராளுமன்ற குழு மீது வீண் சந்தேகங்கொள்ளவோ, விமர்சனங்களை முன்வைக்கவோ வேண்டாம், நாம் ஒருபோதும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை மூடி மறைக்க மாட்டோம் எனவும் அவர் கூறுகின்றார்.

ஈஸ்டர் தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஆராய நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற குழு மீதான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் பாராளுமன்ற குழுவின் வேலைத்திட்டம் குறித்து வினவிய போதே அவர் இதனை கூறினார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

பாராளுமன்ற குழு மீதான விமர்சனங்களை முன்வைக்கும் நபர்கள் முதலில் ஒன்றினை தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்.

ஈஸ்டர் தாக்குதல் முன்னைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றது, முன்னைய ஆட்சியாளர்களின் பலவீனத்தினால் இவ்வாறான அசம்பாவிதம் இடம்பெற்றது.

இப்போது புதிய அரசாங்கம் ஆட்சியில் உள்ள நிலையில், நாம் இந்த தாக்குதல் குறித்து விசாரணைகளை நடத்தவும் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பதை ஆராயவும், இவ்வாறான தவறுகள் இனிமேல் இடம்பெறாது இருக்கும் விதமாக நடவடிக்கை எடுக்கவும் செயற்படுகின்றோம். 

இதில் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கூறும் விடயங்களில் நியாயம் உள்ளது என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். இந்த தாக்குதலுடன் தொடர்புபட்ட குற்றவாளிகள் இன்றுவரை தண்டிக்கப்படவில்லை என்பது அதிருப்தியளிக்கும் விடயம் என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம்.

ஆனால் எக்காரணம் கொண்டும் அறிக்கையை மூடி மறைக்க நாம் நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள குழு மீதி சந்தேகம் கொள்ளத்தேவையில்லை.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு ஒவ்வொரு துறையினருக்கு உள்ளது, இது குறித்த சட்ட நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு சட்டமா அதிபரிடம் உள்ளது, நீதிமன்றம் இது குறித்து தீர்மானம் எடுக்கும். எனினும் அரசாங்கமாக செய்ய வேண்டிய நடவடிக்கைகளை ஆராய இப்போது புதிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. எமது வேலை அரசாங்கத்தின் சார்பில் நடவடிக்கை எடுப்பதாகும். 

அடுத்த ஒருமாத காலத்திற்குள்  ஜனாதிபதிக்கு அறிக்கையை ஒப்படைக்க வேண்டும். பாராளுமன்றத்திலும்  சமர்பிக்க வேண்டும். இது குறித்து ஆராயவே எனது தலைமையில் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கும் நீதிமன்ற செயற்பாடுகளுக்கும் இடையில் தொடர்புகள் இல்லை என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

இப்போது அரசாங்கத்தின் சார்பில் முன்னெடுக்க வேண்டிய விடயங்களை ஆராய்ந்து வருகின்றோம். இவ்வாறான குழு அமைத்து ஆராய்வது ஒரு சம்பிரதாயமாக மேற்கொள்ளப்படுவதாகும்.

அதேபோல் எமது அறிக்கையை  மார்ச் 15 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதிக்கு சமர்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தகுதி இல்லாத நபர்கள் குழுவில் உள்ளனர் என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கற்ற தகுதியான நபர்கள் குழுவில் உள்ளனர், 

அதேபோல் ஜனாதிபதி ஆணைக்குழுவில் தகுதியான கற்றவர்கள் மூலமாகவே இந்த அறிக்கை முழுமைப்படுத்தப்பட்டுள்ளது. நாம் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவிக்கவும்,  அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் முன்வைக்கவே செயற்பட்டு வருகின்றோம் என்றார்.