இசை அமைப்பாளரும், நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிப்பில் தயாராகும் புதிய திரைப்படத்திற்கு 'வணக்கம் டா மாப்ள' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.

யோகி பாபு கதையின் நாயகனாக நடித்த 'நாங்க ரொம்ப பிஸி' ,விக்ரம் பிரபு நாயகனாக நடித்த 'புலிகுத்தி பாண்டி' ஆகிய படங்களை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம், பட மாளிகை மற்றும் டிஜிற்றல் தளம் போன்றவற்றில் அல்லாமல் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வகையில் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் 'வணக்கம்டா மாப்ள'. 

இந்த படத்தில் ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக 'பிகில்' பட புகழ் நடிகை அமிர்தா ஐயர் நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் ஆனந்தராஜ், டேனியல் போப், ஜெயபிரகாஷ், நடிகைகள் ரேஷ்மா, பிரகதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 'சிவா மனசுல சக்தி', 'பாஸ் என்கிற பாஸ்கரன்', 'ஒரு கல் ஒரு கண்ணாடி' ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் எம் ராஜேஷ் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். சித்தார்த் ரங்கநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு,  ஜீ. வி. பிரகாஷ்குமார் இசை அமைத்திருக்கிறார்.  

ஏப்ரல் மாத தமிழ் புத்தாண்டு தினத்தன்று திரையிடப்படும் என எதிர்பார்க்கப்படும் 'வணக்கம்டா மாப்ள' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் காதலர்களான  ஜீ வி பிரகாசையும், அமிர்தா ஐயரையும் ‘கைலாசா ’நாட்டின் அதிபரான நித்தியை போல், டேனியல் ஆசீர்வாதம் செய்வதாய் இணையவாசிகள் கருத்து தெரிவித்து, இணையத்தை தெறிக்க விட்டிருக்கிறார்கள்.

நடிகர் சந்தானத்திற்கு திரையுலக வாழ்க்கையை அமைத்துக் கொடுத்த இயக்குனர் எம். ராஜேஷ், இந்தப்படத்தில் பிக் பொஸ் பிரபலமும், நடிகருமான டேனியல் கதையின் நாயகனுக்கு இணையான வேடத்தில் நடித்திருப்பதாகவும், அவருடைய கதாபாத்திரம் படம் வெளியானதும் பேசப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.