குடந்தையான் 

தமிழக அரசியலில் தம்மை  வலிமையான  திராவிடக் கட்சிகள் என்று பறைசாற்றிக் கொள்ளும் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் அனைத்து தேர்தல்களையும் கூட்டணி அமைத்து தான் முகங்கொடுத்து வந்திருக்கின்றன. இம்முறையும் அதில் பெரிய மாற்றங்கள் நடைபெற்றுவிடவில்லை. சில பகுதிகளில் திரட்சியான வாக்கு வங்கிகளைக் கொண்ட சிறு அரசியல் கட்சிகளை தமது கூட்டணிக்குள் இழுத்துக்கொள்வதற்குரிய காய் நகர்த்தல்களை அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றன.

கடந்த காலத்தில் நடிகர் விஜய்காந்த் தொடங்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு மக்கள்  பாரிய அளவிற்கு வரவேற்பு அளித்திருந்தனர். அதனால் அக்கட்சி ‘எதிர்க்கட்சி’ வகிபாகத்தினையும் பெற்றிருந்தது.

இந்நிலையில் இம்முறை அவ்வாறானதொரு வாய்ப்பை பெறுவதில் திரை நட்சத்திரமான கமல்ஹாசன் தலைமையில் உருவாகியிருக்கும் மக்கள் நீதி மய்யம்  முனைப்புடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த கட்சியின் பொதுக்குழு கூட்டம் அண்மையில்  சென்னையில் நடைபெற்றது. இதில் கட்சியின் நிரந்தர தலைவராக கமல்ஹாசன் தெரிவு செய்யப்பட்டதுடன் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக தலைவருக்கு ஏகமனதான அதிகாரம் அளித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 

பிரசாரத்திற்காக தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்ட கமல்ஹாசனுக்கு  ''மாற்று'' அரசியலை ஆதரிக்கும் மக்களும், வாக்காளர்களும், அவரின் இரசிகர்களும் எதிர்பார்த்ததை விட கூடுதலான வரவேற்பை வழங்கியிருந்தனர். அதிலும் குறிப்பாக திரைநட்சத்திரம் ரஜினிகாந்த் அரசியலிலிருந்து தற்காலிக ஓய்வை அறிவித்த பின்னர் கமல்ஹாசனின் பிரசாரத்திற்கு பொதுமக்களின் அணிதிரள்வு சற்று  அதிகமாகத்தான் உள்ளது. 

இந்த விடயங்களை ஆளும் அ.தி.மு.கவிடத்தில் உளவுத்துறை அறிக்கையாக சமர்பித்துவிட்டது. அதேநேரம், எதிர்க்கட்சியான தி.மு.க தனியார் நிறுவனமொன்றின் கள ஆய்வினை அடிப்படையாக வைத்துக்கொண்டு கள நிலைமைகளைப் புரிந்து கமலை தமது அணிக்குள் ஈர்த்துக்கொள்வதற்கு முனைந்தது. 

அதற்கு அமைவாக, தி.மு.க.விற்கும்  கமலுக்கும் இடையில் முதற்கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருந்தபோதும் அது எதிர்பார்த்த அளவில் பலனளிக்கவில்லை. இதனை இரு தரப்பினருமே பகிரங்கமாக தெரிவித்து விட்டனர். 

முன்னதாக,  கமல்ஹாசன் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளும் ஊழல் கட்சிகள் என்றும் இவைகளுக்கு மாற்றாகவே நாம் களம் காண வேண்டும் என்றும் கூறிவந்திருந்தார்.  அதுமட்டுமன்றி பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய கமல் “விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க.விற்கு மக்கள் அளித்த வரவேற்பையும், மாற்று அணி அந்தஸ்த்தையும் சுட்டிக்காட்டியதோடு மய்யமும் தனித்து போட்டியிட்டு  மிளிர வேண்டும்” என்று தனது விருப்பினை வெளிப்படுத்தியிருந்தார்.  இதுபற்றி கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்தபோது அவர்களும் அதனை ஆமோதித்திருக்கிறார்கள். 

இவ்வாறான நிலையில், மக்கள் நீதி மய்யம் இந்தமுறை அறுபதுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கும் அரசியல் சக்தியாகவும்,  இருபதுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் இரண்டாவது இடத்தினைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பும் உள்ளது என்றும் தேர்தல் கள ஆய்வாளர்கள் புள்ளிவிபரங்களுடன் கூறிவருகின்றார்கள். 

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துவிடக்கூடாது என்பதில் அ.தி.மு.க.வைவிட, பா.ஜ.க. உறுதியாக இருக்கின்றது.  இதனால் கமல்ஹாசனின்  ஒவ்வொரு நகர்வையும் உளவுத்துறையின் மூலம் கண்காணித்து வருகிறது பா.ஜ.க. இப்பின்னணியில் கமல்ஹாசன் விரைவில் சசிகலாவையோ அல்லது ரி.ரி.வி.தினகரனையோ சந்திக்கக்கூடும் என்றும் அது அரசியல் இராஜதந்திர நகர்வாக இருக்கும் என்று மய்யத்தின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தற்போதைய சூழலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க,  பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம்,  தமிழ் மாநில காங்கிரஸ்,  புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் இடம்பெறுவது உறுதியாகியுள்ளது.  அத்துடன் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும்  பா.ம.க.விற்கு 25  இடங்களும் பா.ஜ.க.விற்கு 20 இடங்களும் தே.மு.தி.க.விற்கு 10 இடங்களும்,  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 7 இடங்களிலும் புதிய தமிழகம் கட்சிக்கு இரண்டு இடங்களிலும் ஒதுக்கீடுகளைச்  செய்வதென்றும்  மீதமுள்ள 170 இடங்களில் தாம் நேரடியாக களமிறங்குவதென்றும் அ.தி.மு.க.  திட்டமிட்டுள்ளது. 

இதற்கான இணக்கப்பாட்டு ஒப்பந்தம் விரைவில் நடைபெறவிருக்கும் கூட்டணி கட்சி தலைவர்களுடனான பேச்சுவார்த்தையின் போது கைசாத்திடப்படும் என்று அ.தி.மு.க.வின் உட்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதனை உறுதிப்படுத்துவது  போல் அண்மையில் சென்னைக்கு வருகை  தந்திருந்த பிரதமர் மோடியுடன் பிரத்தியேக  சந்திப்பு நடத்திய  முதலமைச்சர் எடப்பாடி பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்ததாகவும் கட்சியின் தலைவரான ஜே. பி. நட்டாவுடன் பேச்சுக்களை மீண்டும் நடத்தி இறுதி முடிவு எடுக்கலாம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

அதுமட்டுமன்றி இந்திய தேர்தல் ஆணையகத்திலிருந்து அடுத்த மாதம் தேர்தல் திகதி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்பதால் அதற்கு முன்னதாகவே தொகுதி உடன்பாட்டை இறுதி செய்ய வேண்டும் என்ற அ.தி.மு.க.வின் நிலைப்பாட்டிற்கு பா.ஜ.க. தலைமையும் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ஆனால் தமிழக பா.ஜ.க. தலைவர்கள் 39 மக்களவைத் தொகுதிகளுக்கு தலா ஒரு வேட்பாளர் வீதமும் பா.ஜ.க.வின் செல்வாக்கு மிக்க 6 தொகுதிகளில் முழுமையாக களமிறங்கவும் இடமளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி நிற்கின்றனர்.  ஆனால் அ.தி.மு.க. 20 தொகுதிகளை மட்டுமே அதிகபட்சமாக வழங்க முடியும் என்பதில் உறுதியாக இருக்கின்றது. இதனால் நேற்று  ஞாயிற்றுக்கிழமை  பா.ஜ.க.தலைமையுடன், அ.தி.மு.க.தலைமை நடத்தவுள்ள பேச்சுவார்த்தை பெரும் எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. 

அதே தருணத்தில் அ.தி.மு.க.வில் பாரிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட சசிகலாவின் வருகை எதிர்பார்த்த அளவிற்கு  தாக்கத்தினைச் செலுத்தவில்லை. இதனால் சசிகலா அ.தி.மு.க.வை  தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு  வருவதற்காக  வேறு வகையான வியூகங்களை அமைத்து வருவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள். 

புரட்சித்தலைவரின் மறைவுக்குப் பிறகு  ஜா, அ.தி.மு.க. ஜெ, அ.தி.மு.க. என்று  இரு  அணிகள் உருவாகி  தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த பிறகு  ஒருங்கிணைந்து வலிமை பெற்றது போல் தற்போது அ.ம.மு.க. சார்பில் போட்டியிட்டு தேர்தலுக்குப் பின்னர் அ.தி.மு.க.வுடன் இணைந்து வலிமை பெறுவதோடு அதிகாரத்தினையும் கைப்பற்ற முடியும் என்று சசிகலா  திட்டமிட்டிருப்பதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் குறிப்பிடுகின்றார்கள். 

சசிகலா விடயத்தில் தி.மு.க.வின் அரசியல் கணக்கைப் பொய்யாக்கிவிட வேண்டும் என்று அ.தி.மு.க.வின்  ஒருங்கிணைப்பாளரான பன்னீர்செல்வம்  தரப்பு காய் நகர்த்த சசிகலாவைப் பற்றிய பேச்சே வேண்டாம் என்பதிலும் அவர் அ.தி.மு.க.விற்கு வேண்டாம் என்பதிலும் எடப்பாடி தரப்பு உறுதியாக நிற்கிறது. அதேபோல் கூட்டணியில் பா.ம.க . இடம்பெற வேண்டும் என்பதிலும் எடப்பாடி உறுதியாக இருக்கவும்  அவர்கள் கடந்த  தேர்தல்களில் அ.தி.மு.க.விற்கு ஆதரவாக செயல்படவில்லை என்பதை ஆதராங்களுடன் வெளிப்படுத்தி விளக்கமளித்து வருகிறது  பன்னீர்செல்வம் தரப்பு. இதனால் இருதரப்பிடையேயும் மாறுபட்ட நிலைப்பாடுகள் தொடர்கின்றன.

முதல்வர் எடப்பாடி, பன்னீர்செல்வம், சசிகலா என்று மூன்று அரசியல் கோணங்களையும் உற்று கண்காணிக்கும் மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணியில் இருந்துகொண்டே எப்படி ஆதிக்கம் செலுத்துவது என்பதற்கான காய் நகர்த்தல்களை முன்னெடுக்கின்றது. தி.மு.க.வும். தன்னுடைய பலத்தினை நிரூபிப்பதற்கான காய்களை நகர்த்தி வருகின்றது. இவர்களை மீறி மாற்று அரசியல் சக்தியாக மக்கள் நீதி மய்யம் எழுச்சி பெறுமா?  என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.