இலங்கையின் தலைநகராம் கொழும்பு மாநகரில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் ‘மயூரபதியில்’ எழுந்தருளியுள்ள கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத் திருப்பணிகள் நிறைவுபெற்று, கும்பாபிஷேகம் நடைபெற திருவருள் கைகூடியுள்ளது. 

பெண் தெய்வ வழிபாட்டின் குறியீடாக விளங்கும் கொழும்பு - வெள்ளவத்தை மயூராபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் முக்கியத்துவத்தையும், தலைநகரில் வாழும் தமிழ் மக்களின் வாழ்வியலுடன் இணைந்த அதன் வகிபாகத்தையும் நன்கு உணர்ந்த ஆலய அறங்காவலர் சபையின் தலைவர் பெ.சுந்தரலிங்கம் மற்றும் அறங்காவலர் சபை உறுப்பினர்களின் அயராத முயற்சியின் பயனாக, அன்னை கோயில் கொள்ளும் பொருட்டு கருங்கல்லால் ஆலயம் அமைக்கும் சீரிய பணி திருவருளுடன் நிறைவடைந்துள்ளது.

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில் பாலஸ்தாபனம் கடந்த 2015 ஆம் ஆண்டு 06 ஆம் திகதி டிசம்பர் மாதம் இடம்பெற்று, கோயில் திருப்பணி வேலைகளுக்கான ஆயத்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. 

ஏற்கனவே ஆலயம் அமைந்திருந்த இடத்தில் அன்னைக்கு கருங்கல் ஆலயத்தைத் திருப்பணி செய்யும் அதேவேளை, கலை நிகழ்ச்சிகளை நடத்தும் பொருட்டு மண்டபம், இரண்டு மாடிகள் கொண்ட அறநெறிப் பாடசாலை மண்டபம் மற்றும் தியான மண்டபம், கிழக்கு வாயிலில் மூன்று தள இராஜ கோபுரம், வடக்கு வாயிலில் ஐந்து தள இராஜ கோபுரம் அடங்கலான மிகவும் பிரமாண்டமான திருப்பணிகளை ஆலய அறங்காவலர் சபையினர் மேற்கொண்டுள்ளனர். 

மகா கும்பாபிஷேக கர்மாரம்பம் எதிர்வரும் 29.03.2021 திங்கட்கிழமை காலை 6.30 மணிக்கு இடம்பெறுவதுடன், அம்பாள் பக்தர்கள் (01.04.2021) வியாழக்கிழமை காலை 7.30 மணி தொடக்கம் இரவு 9 மணி வரையும் மற்றும் (02.04.2021) வெள்ளிக்கிழமை காலை 7.30 மணி தொடக்கம் மாலை 3.30 மணி வரையும் எண்ணெய்க்காப்பு சாத்தலாம். 

வெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் 04.04.2021 ஞாயிற்றுக்கிழமை மூல நட்சத்திரமும் அமிர்த்த சித்த யோகமும் ஸப்தமி திதியும் கூடிய காலை 6 மணி தொடக்கம் 7.30 வரையான மீன லக்ன சுப முகூர்த்த வேளையில் மகாகும்பாபிஷேகம் இடம்பெற இறையருள் கூடியுள்ளது. தொடர்ந்து 05.04.2021 திங்கட்கிழமை தொடக்கம் 19.05.2021 வரையான 45 நாட்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் மண்டலாபிஷேகம் இடம்பெறும். 

வெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் கும்பாபிஷேக விழாத் திருப்பணியில் அடியவர்களும் இணைந்து பங்கெடுக்க முடியும். இது தொடர்பான மேலதிக விபரங்களை ஆலய அலுவலகத்தில் மாத்திரம் 0112500840 தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும். வெள்ளவத்தை மயூராபதி ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய கருங்கல் சிற்பாலய கும்பாபிசேகப் பெருவிழா சிறக்க நாமும் வேண்டுவோமாக!   

உமாச்சந்திரா பிரகாஷ்